Skip to main content

பாதிப்பை ஏற்படுத்துமா வாடகை தாய் கலாச்சாரம்? மருத்துவர் காந்தராஜ் விளக்கம்

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

Dr Kantharaj talk about surrogate mother and nayanthara vignesh shivan

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும்  பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். ஆனால் விதிமுறைகளை மீறி இருவரும் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக விமர்சனம் எழுந்ததுடன், அமைச்சர் மா. சுப்ரமணியன் இது தொடர்பாக இருவரிடமும் விளக்கம் கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக மருத்துவரும், அரசியல் விமர்சகருமான காந்தராஜை நக்கீரன் யூடியூப் மூலமாக சந்தித்தோம். அதில் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

“ஒரு நடிகைக்கு வாடகை தாய் மூலமாக குழந்தை பிறந்தது எல்லாம் ஒரு பிரச்சனையா? இன்றைக்கு திருமணம் செய்துகொள்ளாமல் ஆண், பெண் இருவரும் சேர்ந்து வாழும் உறவு முறை(living together) என்ற ஐரோப்பிய நாகரீகம் நம் நாட்டிற்கும் வந்துவிட்டது. அவர்களுக்கு திருமணமாகி  5 மாதங்கள்தான் ஆகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக  சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அப்போது கருத்தெரித்திருக்கலாம், அதன் மூலம் வாடகை தாய் மூலம் குழந்தையும் பெற்றிருக்கலாம். அது என்னை பொறுத்தவரையில் பெரிய விஷயமாக தெரியவில்லை. 

 

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதில் சில விதிமுறைகள் இருக்கிறது, அதை விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் மீறி விட்டதாக சொல்லப்படுகிறதே..

 

ஆமாம், இப்போ அந்த விதிமுறைகளை மீறியிருந்தால் என்ன செய்ய போகிறீர்கள். நயன்தாரா விக்னேஷ் சிவனை கைது செய்து சிறையில் அடைத்து விடுவீர்களா.. சொல்லுங்க, என்ன செய்ய போறீங்க? தேர்வு செய்வதற்கு தான்  விதிமுறையை பயன்படுத்த வேண்டும். ஒரு வேலை விருப்பம் இல்லாமல், ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி வாடகைத் தாயாக மாற்றியிருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம், விதிமுறை என்பதே இந்த மாதிரியான விஷயங்களுக்கு தான்  பயன்படுமே தவிர, அந்த பெண்ணே வாடகை தாயாக இருக்க சம்மதம் தெரிவித்த பிறகு என்ன நடவடிக்கை எடுக்க முடியும். இன்றைக்கு நம் நாட்டில் நிலவும் வறுமை நிலைக்கு தனது சிறுநீரகத்தை விற்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் வில்லிவாக்கத்திற்கு பெயரே கிட்னிவாக்கம் என்று சொல்லும் அளவுக்கு, அதிகப்படியான சிறுநீரக தானம் நடைபெற்றது. அதேபோன்று, வறுமையில் வாடும் ஏதோ பெண் வாடகை தாயாக இருந்திருப்பார்கள். வாடகை தாய் முறை மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து வந்தது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை காரணமாக, குழந்தை பெறுவதற்கு கடினம் என்பதால், நல்லா இருக்கும் பெணகள் கூட வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். 

 

இதில் ஒரு விசேஷம் என்ன தெரியுமா... வாடகை தாய் பழக்கத்தை முதன் முதலில் சொன்னது பெரியார்தான். 1933-ல் பெரியாரிடம் ஆணும் பெண்ணும் சமமாக இருப்பதை  பற்றி பேசுறீங்களே, பெண்ணுக்கு குழந்தை பிறப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு, வருங்காலத்தில் குழந்தைகளை குழாய் மூலமாக (டெஸ்ட் டியூப் பேபி) பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார். இதை கேட்ட சுவீடன் அறிஞர்கள், ஆச்சரியப்பட்டு இப்படிபட்ட சிந்தனை கொண்டவர் யார் என்று அறிந்து, அவருக்கு அங்கு ஒரு தனி துறையே  திறக்கும் அளவுக்கும் பெரியாரின் சிந்தனைகள் இருந்தது. 

 

காலப்போக்கில் வாடகை தாய் கலாச்சாரம் பெருகிக்கொண்டேதான் இருக்கும். 130 க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் வாடகை தாய் கிடைப்பது மிகவும் எளிதான ஒன்று. வறுமையின் காரணமாக சிலர் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது.  கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்லத்தான் சட்டங்கள் பயன்படுமே தவிர, வாடகை தாய் மூலம் குழந்தை பெறுபவர்கள் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருப்பார்கள்.  இன்றைக்கு சிறுநீரக தானம் நெருங்கிய உறவினர்களுக்குதான் கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை இருக்கிறது. ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை. அதை ஏன் சட்டத்தால் தடுக்க முடியவில்லை. இன்று காசு கொடுத்தால் போதும் எதுவேண்டுமானாலும் கிடைக்கும் என்ற சூழலுக்கு  தள்ளப்பட்டிருக்கிறோம். 

 

வாடகை தாய் மூலம் வரும் குழந்தைகள் வளர்ந்து, பெற்றோர்களை போல வாடகை தாயின் மீதும் பாசம் வைக்கும் சூழல் ஏற்படுமா...

 

குழந்தைகள் வாடகை தாயின் மீது பாசம் வைக்கும் சூழல் வருமா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும். வாடகை தாய் கலாச்சாரம் இப்போதுதான் பெரிதாக வந்து கொண்டிருக்கிறது. அதனால் இனி வரும் காலங்களில் இது பற்றி தெரிய வரும். ஆனால் வாடகைதாயின் மூலம் குழந்தை பெறுவதில் ஒரு விதிமுறை இருக்கிறது. வாடகைதாய்க்கு யாரின் குழந்தையை சுமக்கிறோம் என்று தெரியாது. அதை மருத்துவர்களும் வாடகைதாயிடம் சொல்லகூடாது என்பதுதான் விதிமுறை. அதனால் குழந்தைகள் வாடகை தாயின் மீது பாசம் வைக்கும் சூழல் ஏற்படாது. பெண்களாக பிறந்த அனைவரும் தான் ஒரு குழந்தைக்கு தாயாக வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்கள். அதனால் வாடகை தாய் கலாச்சாரம் வந்துகொண்டேதான் இருக்கும். வாடகை தாய் மூலம் வரும் குழந்தைகள் குறைவாக இருக்கிறார்கள், அவர்கள் அதிகமாக வரும் போது எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

 

சார்ந்த செய்திகள்