கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு திடீரென பாடகர் எஸ்.பி.பி கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் இதுகுறித்து விளக்கம் அளித்தார். அதில்....
"என் தந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்ததற்கு மிக்க நன்றி. அவர் ஐசியூவில் வென்டிலேஷனில் உள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். அவரது உடல்நிலை குறித்துத் தொடர்ந்து தகவல்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். மீண்டும் நன்றி" என அறிவித்தார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவும் இதுகுறித்து விளக்கமளித்தார். அதில்...
"தயவுசெய்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம். நம் அன்புக்குரிய எஸ்பிபி சார் விரைவில் குணமடையவும், திரும்பி வந்து நம்மை மகிழ்விக்கவும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்" என கூறியுள்ளார்.