நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ராஜேஷ் தயாரித்துள்ளார். திட்டமிட்டபடி வெளியாகவிருந்த இப்படம், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ரிலீஸ் தள்ளிப்போனது. பின்னர், ரம்ஜான் தினமான மே 14ஆம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. கரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸில் மீண்டும் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், 'டாக்டர்' திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 'டாக்டர்' படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையையும் ஹாட் ஸ்டார் நிறுவனம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தயாரிப்பு தரப்பு 'டாக்டர்' படத்தின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை சன் டிவியிடம் முன்னரே விற்றுவிட்டதால் இந்தப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்தது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்துவருவதால் ஊடரங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன.
இதனைக் கவனத்தில் எடுத்த தயாரிப்பு தரப்பு, 'டாக்டர்' படத்தை நேரடியாக திரையரங்கில் வெளியிட முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி 'டாக்டர்' படத்தை திரைக்கு கொண்டுவரும் யோசனையில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது.