நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றதையடுத்து, டாக்டர் திரைப்படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாகும் எனக் கடந்த மாதம் படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் படக்குழு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், எதிர்வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த, 2019-ஆம் ஆண்டு வெளியான 'ஹீரோ' திரைப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் படத்தைத் திரையரங்கில் காணும் ஆவலோடு இருந்த ரசிகர்கள், இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.