ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான குலு குலு திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இயக்குநர் ரத்னகுமாரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் குலு குலு படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
”கதை எழுதும்போது டைட்டில் இருக்க வேண்டும் என்பதால் பிறகு மாற்றிக்கொள்ளலாம் என்று நினைத்து தற்காலிகமாக குலு குலு என்று பெயர் வைத்தேன். மொத்த கதையும் படித்து முடித்த பிறகு இதைவிட பொருத்தமான டைட்டில் இந்தப் படத்திற்கு இருக்க முடியாது, அதனால் டைட்டிலை மாற்ற வேண்டாம் என்று சந்தானம் சொன்னார். எனக்கும் அது சரி என்று பட்டது. அதனால் டைட்டிலை மாற்றவில்லை. படம் பார்க்கும் போது ஏன் குலு குலுனு பெயர் வைத்தோம் என்று உங்களுக்கே புரியும்.
படத்தின் முதல் ஃப்ரேம்லயே கதை தொடங்கிவிடும். வழக்கமாக சந்தானம் பண்ணும் பாடி லாங்குவேஜ், ஒன்லைன் பஞ்ச்சை இந்தப் படத்தில் நிறைய கேரக்டர் பண்ணும். அதனால் கதை கேட்கும்போது ரொம்பவும் ஆர்வமாக சந்தானம் கேட்டார். கதையில் ஒரு புதுமை இருக்கிறது. அதைத்தான் இன்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்தக் கதை கண்டிப்பா ஜெயிக்கும் என்று நம்பிக்கையாக சொன்னார். ஏ சென்டர்களில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் கடைநிலை வரை இந்தப் படம் சென்று சேர என்னென்ன விஷயங்கள் படத்தில் இருந்ததோ அதையெல்லாம் மெருகேற்ற சந்தானம் ரொம்பவும் மெனக்கெட்டார். எடிட் முடிந்த பிறகுகூட நிறைய இன்புட்ஸ் கொடுத்தார். டப்பிங்கில் இந்த மாடுலேசனில் பேசுகிறேன், அப்படிப் பேசுகிறேன் என்று நிறைய மெனக்கெடலோடு பண்ணிக்கொடுத்தார்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தில் என் அப்பா ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் 50 வருடமாக சிலம்பம் மாஸ்டராக இருக்கிறார். ராமராஜன் தொடங்கி சிம்புவரை நிறைய பேருக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவருக்கு வேறு எதாவது படத்தில் நல்ல ரோல் கொடுக்கனும் என்று நினைத்தேன். சமீபத்தில் அப்பாவுக்கு கரோனா வந்ததால் ரொம்பவும் சோர்வாக இருந்தார். அவருக்கு எனர்ஜி கொடுக்குற மாதிரி இருக்கும் என்று நினைத்து இந்தப் படத்தில் நடிக்க வைத்தேன்.
மாஸ்டர், விக்ரம் படத்தில் பணியாற்றியது பெரிய அனுபவமாக இருந்தது. குறிப்பாக ஆக்ஷன் சீக்குவன்ஸ் எழுதும்போது அந்த அனுபவம் பெரிய அளவில் கைகொடுக்கிறது. குலு குலு அனைவருக்கும் பிடிக்கக்கூடிய படமாக இருக்கும். நிச்சயம் திரையரங்கில் வந்து பாருங்கள்” என்றார்.