இயக்குநர் வெங்கட் பிரபுவின் தயார் மணிமேகலை நேற்று முன்தினம் (10.05.2021) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வெங்கட் பிரபுவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், தன்னுடைய தாயார் மரணம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனது தந்தை திரு. கங்கை அமரன் அவர்களும், எனது தம்பி ப்ரேம்ஜியும், நானும் என் குடும்பமும் எங்கள் குடும்பத்தின் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம். முன்னொருபோதும் பார்த்திராத இப்படிப்பட்ட பேரிடர் காலத்தில் ஒரு பேரிழப்பில் திக்கித் திணறிக்கொண்டு இருக்கிறோம்.
இந்த நிலையில் எங்களை அரவணைத்துத் தேற்றித் தோள்கொடுத்து நிற்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக என் ஆத்மார்த்தமான நன்றிகளையும் சிரம்தாழ்ந்த வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாகவும் எங்கள்மீது நீங்கள் அனைவரும் பொழிந்து வரும் பிரதிபலனில்லா அன்பில் நெகிழ்ந்துபோய் இருக்கிறோம்.
காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் எங்கள் குடும்ப நண்பர் டாக்டர் திரு.தீபக் சுப்ரமணியம் அனைவரது அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். உடன் பணிபுரியும் சக தோழர்கள், நண்பர்கள், சக திரைப்பட, ஊடக சகோதர சகோதரியர், ரசிகர்கள் அனைவரது அஞ்சலிக்கும் பிரார்த்தனைகளுக்கும் நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம்.
தம் வாழ்வின் மிக முக்கிய தருணத்தின் அலுவல்களுக்கிடையிலும் என் அன்னையின் நிறைவு நாட்களிலும் ஆத்மசாந்திக்கான வழிமுறைகளிலும் எங்களோடு இமயம் போல் நின்று வலுவூட்டி தேவைப்பட்ட அத்தனை உதவிகளையும் தக்க நேரத்தில் செய்து தந்த என் நண்பர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.