சாத்தான்குளம் சம்பவத்திற்கு பலரும் அறிக்கை வெளியிட்டனர். அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். அந்த வரிசையில் சில தினங்களாக இயக்குநர் தங்கர் பச்சான் பெயரில் அறிக்கை ஒன்று சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தங்கர்பச்சான், “அண்மைக்காலமாகவும் கடந்த காலங்களிலும் என் உருவப் படங்களை பயன்படுத்தியும், என் பெயரைப் பயன்படுத்தியும் போலிச் செய்திகள் உலவுகின்றன. இன்று கூட 'சாத்தான்குளம் இரட்டைக் கொலை' குறித்த என் பெயரில் உலவும் செய்தி ஒன்றினை நண்பர் அனுப்பி வைத்திருந்தார். இன்றுவரை இக்கொலைகள் குறித்த எந்தக் கருத்தையும் நான் தெரிவிக்காத நிலையில் இப்படிப்பட்ட ஒரு செய்தியை வெளியிட்டவர் தண்டனைக்கு உள்ளாவார்.
இணையக் கூலிகள் அதிகரித்துள்ள இவ்வேளையில் இதுபோன்ற செய்திகளை இனிமேலும் கண்டுகொள்ளாமல் இருந்தால் என் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என உணர்ந்தபடியால் இந்த இறுதி எச்சரிக்கையை விடுக்கின்றேன்.
நான் பேசினாலும், எழுதினாலும், அறிக்கை விடுத்தாலும் எனது கைப்பேசி எண்களிலிருந்து இயங்கும் வாட்ஸ் அப், எனது ட்விட்டர், ஃபேஸ்புக் இவற்றில் மட்டுமே அச்செய்திகள் வெளிவரும். இவற்றில் வெளிவரும் செய்திகள் மட்டுமே அச்சு ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் தரப்படும். எனவே எனது கணக்கில் இயங்கும் இவற்றில் வெளியாகும் செய்திகள் மட்டுமே என்னுடையவை.
இனி என்னுடைய பெயரில் எந்தச் செய்திகள் வெளிவந்தாலும் அதை வெளிப்படுத்துபவர்கள் மேல் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இறுதி எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.