நடிகர் விஜய் தற்போது ஆக்ஷன் ஹீரோவாக மாறியதற்கு முதல் காரணமாக இருந்த படம் திருமலை. அந்த படம் வெளியாகும் வரை விஜய் ஒரு லவ்வர் பாய் கதாபாத்திரத்தில், ஆக்ஷன் மிகவும் கம்மியாக நடித்து வந்தார். திருமலை படம்தான் ஆக்ஷன் படமாக விஜய்க்கு முதல் வெற்றியை தந்த படம். அந்த படத்தை இயக்கியவர் ரமணா. இவர்தான் விஜய்யை வைத்து ஆதி என்றொரு படத்தையும் இயக்கியவர். இவர் தனுஷை வைத்து சுள்ளான் என்றொரு படத்தையும் இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களுக்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தவர் நீண்ட காலமாக தொண்டை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வர போராடி வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவரில் காரில் சென்றபோது போலீஸார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும் ஃபேஸ்புக்கில் புகார் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதில் பல நேர்மையான அற்புத மனிதர்களையும் தனிப்பட்டமுறையில் எனக்கு மிக நெருங்கிய பரிட்சையமும், நட்பும் உண்டு. ஆனால்...
இன்று மேலே படத்திலுள்ள, நான் சந்தித்த நேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் K. குமரன், காவலர் M. ராமர் இருவரும் அந்த கண்ணியமான நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல் ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூட கருதத்தகுதியற்றவர்கள்.
இன்று காலை நான், என் மனைவி, மகள் உட்பட காரில் சென்றபோது சாந்தோமில் என் வீட்டருகில் காவல்துறை சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்துக்கொண்டிருந்தது.
சாலை விதிகளை மீறும் வழக்கம் எனக்கு எப்போதும் இல்லாத காரணத்தால் நான் சாலை விதிகளுக்குட்பட்டே என் வாகனத்தை திருப்பினேன். மிதமான வேகத்தில் வந்த என்னை வழியில் அங்கிருந்த காவலர் M. ராமர் வழிமறித்து காரை நிறுத்தச்சொல்லி நான் விதியை மீறி திரும்பியதாக சொல்லி அபராதம் கட்ட சொன்னார். ஆனால், விதியை மீறாததால் நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி. எனது லைசன்சை காண்பிக்கச் சொன்னார். பின்னர் எனது லைசன்சை வாங்கி அங்கு அபராதம் விதித்துக்கொண்டிருந்த உதவி ஆய்வாளர் K. குமாரிடம் தந்து எனக்கு அபராதம் விதிக்கச் சொன்னார்.
அதற்கு நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காக காவலரிடம் என் லைசன்சை தரவில்லை, எனக்கு வாகனம் ஓட்ட தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி அபராதம் கட்ட மறுத்தேன்.
அப்போது அந்த மனித பண்பாளர் உதவி ஆய்வாளர் திரு. K. குமார். அவர்கள் என்னை பார்த்து, ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்... என்று கூற கேன்சரால் பாதிக்கபட்டதை அறிந்தும் அவர் அப்படி பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
ஒரு கான்ஸரால் பாதித்தவனை அரசாங்கத்தின் காவல்துறையில் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இப்படி மனிதானமற்ற முறையில் பேசியது வேதனைக்குறியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட...
அதைவிட கொடுமை. அழைத்துவந்த காவலர் M. ராமரிடம், பாதியிலயே சாவப் போறவனயேல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..? என்று கூற, நான் அவரிடம் நீங்கள் அப்படிப்பேசுவது தவறு என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, அப்படித்தாண்டா பேசுவேன்... நீ என்ன பெரிய **ரா..? என்ன புடுங்குறியோ போய் புடுங்கு... என்று தன் பதவியையும் பொறுப்பையும் உணராமல் கீழ்த்தரமாக பேச, கோபத்தால் நானும் அவரை என்னை அவர் கூறிய அதே வார்த்தைகளால் அவரைத் திருப்பித்திட்ட... வாக்குவாதம் நீடிக்க... பக்கத்தில் முதல் கூறிய வட்டத்தில் மற்ற உதவி ஆள்வாளர் பதவி வகிக்கும் ஒருவர் உன்மையை உணர்ந்து என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்து அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தார்.
அங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக்கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒருஜினல் லைசன்ஸ் அந்த கண்ணியமற்ற காவல் அதிகாரிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு நான் காரை திருப்ப முயல, என் மகள் தர்ஷினி வேண்டாம்பா... நீங்க மறுபடியும் போகவேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கூற, மேலும் சூழலை சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசன்ஸ் வாங்க அனுப்பினேன்...
ஆனால் அந்த K. குமார் என்ற உதவி ஆய்வாளர் பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவளை வேண்டுமேன்றே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால்தான் லைசன்சை தருவேன் என்று நிர்பந்தித்ததால், என் மகள், நான் மீண்டும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என் குரல் மற்றும் உடல் நிலையை மோசமாக்கி கொள்ள விரும்பாமல் எனக்கு தெரிவிக்காமல் அபராத்தை செலுத்தி என் ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொண்டுவந்து தந்தாள். அவள் அபராதம் செலுத்தியது எனக்கு தெரியாத காரணத்தான் நான் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின்பே அவள் அபராதம் கட்டி லைசன்ஸை வாங்கி வந்ததை வருத்தத்துடன் கூறினாள்.
அரசாங்கத்தின் விதிமுறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்கவேண்டும். மாற்றாக இதுபோன்ற மனிதம் அற்ற மோசமான ஈனச்செயலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாய் இருப்பது வேதனை.
குறிப்பாக கேன்ஸர் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவார் என்றால்... சராசரி வெகுஜனத்திடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது.
உயிருடனும், வாழ்வுடனும் போராடிக்கொண்டிருக்கும் எங்களைப்போன்ற கேன்ஸர் போராளிகளிள் யாரிடமும் அனுதாபத்தை எதிபார்ப்பதில்லை... ஆனால்,
இவர்களை போன்றவர்கள் கருணையுடன் நடத்தவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் பாதியில் சாகப்போகிறவன்... என்றும் கண்ணியமில்லாத வார்தைகளை சராசரி மனிதர்களிடம் அதிகாரத் திமிரில் பயன்படுத்தி காயப்படுத்துவதை தவிர்க்கலாம்.
செய்வார்களா...?
வேதனையுடன்
ரமணா
பின் குறிப்பு :- எனது இந்தப் பதிவில் என் கருத்தில் நியாயம் இருப்பதாய் நண்பர்கள் நீங்கள் கருதினால் இப்பதிவை உங்கள் பக்கத்தில் பகிரவும்.
உங்களின் பகிர்தலால் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனை யார் மூலமாவது அம்மனிதர்களை சென்றடைந்து குறைந்தபட்சம் அவர்களிடத்து சக மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம் மனிதத்தன்மையுடன் மாறாதா என்ற நப்பாசைதான்.
நம்பிக்கைதானே வாழ்க்கை.
நட்புடன்
ரமணா” என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து இயக்குனர் ரமனாவிடம் பேசியபோது, “இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது அதனால் நண்பர்களுடன் இதை பகிர்ந்தேன். இதுகுறித்து கேள்விபட்ட உதவி ஆணையர் கிருஷ்ண மூர்த்தி எனது இல்லத்திற்கு வந்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததாகவும் என் மீது தவறு இல்லை என்பதை தெரிந்துகொண்டதாகவும் கூறி வருத்தம் தெரிவித்தார். இதில் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையர் அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்” என்று கூறினார்.