இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ரைட்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது கலையரசன் மற்றும் அஞ்சலி பாட்டில் நடித்துள்ள குதிரைவால் படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படம் மார்ச் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித், கலையரசன், இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், "ரொம்ப மகிழ்ச்சியான நிகழ்வு இது. சினிமாவில் பல வகைகள் இருக்கு, அதைப் பார்த்துத் தான் சினிமாவுக்கே நான் வந்தேன். நான் பார்த்த சினிமாவால் பாதிக்கப்பட்டு சினிமா எடுத்தேனா என்றால், இந்த சமூகம் அதுபோன்ற ஒரு சினிமாவை எடுக்க விடவில்லை. பல கேள்விகள் கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களைப் பேசுகிற திரைப்படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆள் நான். ஆனால், அதை ரசித்து மிகச் சந்தோஷமாகத் தான் செய்துகொண்டிருக்கிறேன். அது இந்த சமூகத்தில் நிறையக் கேள்விகளை உருவாக்குகிறது என்றும் நம்புகிறேன். மற்றபடி ஒரு கலைஞனாக என்னுடைய சினிமா விருப்பம் வேறு விதமானது. இயக்குநர் மனோஜ் இயக்கிய குறும்படம் ஒன்றைப் பார்த்தேன், மிகச் சிறப்பாக இருந்தது. அந்த குறும்படத்தின் மேக்கிங் போன்ற அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்ததோடு, மனோஜ் மீது மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. எனக்கு பொதுவாகத் தன்னிச்சை படைப்பாளிகள் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர்களால் தான் புதிதாகச் சொல்ல முடியும், ரசிகர்களுடைய கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு கதை சொல்வார்கள். அதுபோலத் தான் குதிரைவால் படத்தை நான் பார்த்தேன். குதிரைவால் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. அது ரொம்ப பிடித்திருந்தது" என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பா.ரஞ்சித், "சினிமா இன்று இருக்கும் சூழலில் திரையரங்கை விட ஒடிடி-யில் படத்தை வெளியிடலாம் என்று நான் கூறினேன். என்னுடைய ‘ரைட்டர்’ படம் கூட திரையரங்கில் வெளியாகிப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டது. அதனால், குதிரைவால் படத்தை ஓடிடி-யில் வெளியிடுவது பற்றி ஆலோசிக்குமாறு கூறினேன். ஆனால், விக்னேஷ் இந்த படத்தைத் திரையரங்கில் தான் வெளியிட வேண்டும், என்று உறுதியாக இருந்தார். காரணம், இந்த படம் திரையரங்க ரசிகர்களுக்கான படம். அவர்களுக்கான புதிய விஷயத்தைச் சொல்லும் படம். எனவே, ரசிகர்கள் இந்த படத்தைத் தவறவிடக் கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அப்படி ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் படமாக குதிரைவால் இருக்கும் என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.