ஹேமா கமிட்டயின் ஆய்வறிக்கைக்கு பிறகு திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இது ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து நடிகைகள் பெண்கள் கொடுக்கும் புகாரின் பேரில் சம்பந்தப்பட நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா பத்திரிக்கை நிறுவனம் நடத்திய நேர்காணலில் பங்கேற்ற வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித் இருவரும் திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து பா.ரஞ்சித் பேசுகையில், “சினிமா துறையில் மட்டும் பாலியல் துன்புறுத்தல் நடப்பது இல்லை. வேலை செய்யும் எல்லா இடங்களிலும் நடக்கிறது. சாதாரண வேலை செய்யும் பெண் இதுபோல நடக்கிறது என்று சொன்னால், இங்கு இருக்கும் யாரும் அதைக் கேட்பதும் இல்லை, சரியான விதத்தில் பேசுவதும் இல்லை. சொல்லபோமானல் அதைக் கண்டுகொள்ளக்கூட மாட்டார்கள். சினிமா துறையிலிருந்து ஒருவர் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது என்று கூறினால். அந்த விஷயம் பெரிதாக பேசப்படுகிறது.
அதேபோல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் எளிய குடும்பத்துப் பெண்களின் குரலைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். பிரச்சனை இருக்கா? இல்லையா? என்பது அடுத்த விஷயம். முதலில் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம்தான் நிற்க வேண்டும். வீடுகளில் தொடர்ந்து பாகுபாடுகளை கற்றுதருவதற்கு பதிலாக சமத்துவத்தைக் கற்றுக்கொடுத்தால், இந்த நிலை கொஞ்சம் மாற வாய்ப்பிருக்கிறது” எனத் தெரிவித்தார்.