'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை' என இயக்குனர் எச்.வினோத் இயக்கிய படங்கள் எதுவுமே சாதாரணமாவை அல்ல. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிறது. படம் குறித்தும் அவரது பயணம் குறித்தும் பேசினோம். நக்கீரன் இதழில் வெளியாகியுள்ள முழு பேட்டியின் ஒரு பகுதி இங்கே...
வலிமை படம் தொடங்கியதிலிருந்து ரிலீஸ் வரையிலான இந்த இரண்டு ஆண்டுகள் எப்படி இருந்தன?
ரொம்பவும் அழுத்தமாக இருந்தது. முதலில் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அடுத்த தீபாவளிவரை ஷூட்டிங்கே முடியவில்லை. பின், பொங்கலுக்குப் படம் வெளியாகப்போகிறது என்று நம்பிக்கையோடு இருக்கையில் மீண்டும் தள்ளிப்போனது. சின்ன வெளிச்சம் தெரிவதுபோல இருக்கும். ஆனால், உடனே அணைந்துவிடும். சினிமா மட்டுமல்ல எல்லா துறையினருக்குமே இந்தக் கரோனா காலம் மிகப்பெரும் போராட்டமாக இருந்தது. தற்போதுதான் சினிமா இண்டஸ்ட்ரி மீண்டுவர ஆரம்பித்துள்ளது. இப்படியான நேரத்தில் தேவையில்லாத நெகட்டிவ் விஷயங்களைப் பரப்பாமல் அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் பொதுமக்களும் வலிமை படத்திற்கு ஆதரவு தரவேண்டும். படம் உங்களுக்குப் பிடித்திருந்தால் பிடித்திருக்கு என்று சொல்லுங்கள். தேவையற்ற நெகட்டிவ் ரிவியூஸ் வேண்டாம். அதுதான் கோவிட் நேரத்தில் நாங்கள் எதிர்கொண்ட மன அழுத்தத்திற்கான மருந்து.
அடுத்த படமும் அஜித்துடன் ஆரம்பிச்சுட்டீங்க... 'ஏ.கே.61' படத்தில் என்ன மாதிரியான விஷயங்களை எதிர்பார்க்கலாம்?
நான் மிகப்பெரிய சமூக பிரச்சனையாகப் பார்க்கும் ஒரு விஷயத்தை இந்தப் படம் பேசும். முழுக்க நெகட்டிவ் இல்லாமல் கொஞ்சம் நெகட்டிவ் தன்மை கொண்ட கதாபாத்திரத்தில் அஜித் சார் நடிக்க இருக்கிறார். வலிமை ரிலீஸ்வரை அது பற்றி நிறைய பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்.