விஜய்யின் திரைவரலாற்றில் மிக முக்கியமான வெற்றி 'கில்லி'. அதுவும் அது சொல்லியடித்த 'கில்லி'. இந்தப் படம் பெரிய ஹிட்டாகுமென்று நம்பிக்கையோடு விஜய், தரணி, ஏ.எம்.ரத்னம் மூவரும் முன்பே பேட்டிகளில் கூறியிருந்தனர். இது பொதுவாக எல்லோரும் சொல்வதுதான் என்றாலும் அவர்கள் சொன்னது பெரும் நம்பிக்கையுடன். அதன்படியே படம் மிகப்பெரிய வெற்றி. படத்தின் வசனங்கள் அந்த நேர விஜய் - அஜித் ரைவல்ரிக்கு எண்ணெய் ஊற்றியவை. விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. அந்த வசனங்களை எழுதியவர் பரதன். பின்னாளில் அழகிய தமிழ்மகன், பைரவா என இரண்டு படங்களில் விஜயை இயக்கியுள்ளார். அஜித்தின் 'வீரம்' படத்திற்கு இவர் எழுதிய வசனங்கள் பேசப்பட்டன. நக்கீரனுக்காக அவர் எக்ஸ்க்ளூசிவ்வாகப் பகிர்ந்த 'கில்லி' கதை...
"நானும் தரணி சாரும் சேர்ந்து தில், தூள் ரெண்டும் பெரிய ஹிட். ஒரு ஹாட்ரிக் அடிக்கணும்னா மூன்றாவது படம் மத்த இரண்டு படங்களை விட நல்லா வரணும். அடுத்து என்ன பண்ணுறதுன்னு யோசனை பன்னிக்கிட்டு இருக்கறப்ப, ஏ.எம்.ரத்னம் சார் 'இதே டீம், ஹீரோ விஜய் சாரு'ன்னு சொல்லிட்டாரு. விஜய் சாருக்கான கதை தேவை. அதற்காக யோசனைகளில் இருக்கும் போது தெலுங்கில் 'ஒக்கடு'னு ஒரு படம் மகேஷ் பாபு நடிச்சி வெளியாகி இருந்தது. இந்தப் படத்தை போய் பாருங்கன்னு தரணி சார் என்கிட்ட சொன்னாங்க. விஜய் சாரும் அந்தப் படத்தை பாத்திருந்தாங்க. நான் சென்னையில உள்ள தியேட்டரில் அந்தப் படத்தை பார்த்தேன். இருந்தாலும் மக்களோடு உட்கார்ந்து அந்தப் படத்தை பார்த்து அவங்களோட ரெஸ்பான்ஸ் என்னனு பாக்கணும்னு எனக்கு ஆசை.
உடனடியாக அன்னைக்கு ஈவினிங்கே நானும், தரணி சாரும் சேர்ந்து ஹைதராபாத்க்கு போனோம். முழு படத்தையும் பார்த்தோம். எந்த இடத்துல அப்லாஸ் வருது, எந்த இடத்துல ரசிகர்கள் என்ஜாய் பண்றாங்க என்பதையெல்லாம் கவனிச்சோம். அப்பவே சில குறிப்புகளை எடுத்துக்கிட்டோம். இருந்தாலும், படத்தோட இயக்குநரிடம் பேசி, படம் எந்த சூழ்நிலையில் உருவானது, நினைச்ச மாதிரியே படம் எடுக்க முடிந்ததானு பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டோம். அவரும் எங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களை கூறினார். அப்புறம் அடுத்த நாள் கலையிலேயே பிளைட் பிடிச்சி சென்னை வந்தோம். அதற்குள் படத்துக்குத் தேவையான அனைத்து முக்கிய விஷயங்களையும் தயாரித்திருந்தோம்.
குறிப்பா அந்தத் தெலுங்கு படத்தில் பெரிய கூட்டத்துல ஹீரோ வில்லனை அடிச்சிட்டு, சிட்டியில இருக்கிற ஒரு பில்டிங்கில் கொண்டுவந்து ஹீரோயின யாருக்கும் தெரியாம மறைத்து வைத்திருப்பார். அப்ப நம்ம எப்படி செய்யலாம்னு யோசிச்சதுல, ஹீரோ மதுரையில ஊரையே ஆட்டிப்படைக்கிற வில்லனை அடிக்கற மாதிரியும், ஹீரோயினை மதுரையில இருந்து கொண்டு வந்து சென்னையில லைட் ஹவுஸ்ல வைக்கிற மாதிரியும் சீன் வைக்கலாம்னு முடிவு செய்தோம். கூடவே மயில்சாமி மாதிரி ஹீரோவோட ஃபேனா இருக்கிறவர அந்த இடத்துல பாதுகாப்புக்கு போடனுங்கிறதையும் நோட் பன்னி வைத்திருந்தோம். முக்கியமா படம் பார்க்கும்போதே படத்தோட இன்டர்வெல் பிளாக்க மாத்தணும்னு முடிவு செய்தோம். ஏன்னா, அந்த படத்துல பிரகாஷ்ராஜ் அடிவாங்கிட்டு சேத்துல இருக்குற மாதிரி இன்டர்வெல் பிளாக் விடப்படும். ஆனால் விஜய் மாதிரி ஒரு மாஸ் ஹீரோ நடிக்கும் போது, வில்லனை ஃபோகஸ் பண்ணி இன்டர்வெல் விட்டா அது நல்லா இருக்குமா சரியா இருக்காதேன்னு நினைத்தோம். விஜய் சார் ஏதாவது பண்ணிட்டு மாஸா இன்டர்வெல் விட்டா நல்லா இருக்குமே மட்டும் மனசுல பிக்ஸ் பண்ணிக்கிட்டோம். காட்சி எப்படி இருக்கணும்னு படம் பண்ணும்போது பாத்துக்கலாம்னு முடிவு செய்திருந்தோம். இது எல்லாத்தையுமே சென்னை வருவதற்குள்ள நானும் தரணி சாரும் முடிவு செய்தோம்.
வசனங்களிலும் நல்லா கவனம் செலுத்தினோம். 'தம்மாதுண்டு பிளேடு மேல வைக்கிற நம்பிக்கைய உன் மேல வை' என்ற வசனத்தை விஜய் சார் பேசியிருப்பாரு. படத்துல சென்னை பையனா இருக்குறதால அந்த மாதிரி லோக்கலா பேச வேண்டிய நிலை இருந்தது. ஒக்கடுவிலும் இந்த வசனம் இருந்தது. அந்த காலகட்டத்துல விஜய் சார்க்கு இருந்த ரசிகர்கள், மாஸ் இதையெல்லாம் மனசுல வச்சு வசனங்களை உருவாக்கினோம்.
என்னோடைய பார்வையில் புரட்சி தலைவர் எம்..ஜிஆரோட பாடலை பாடி ரயிலிலோ அல்லது தெருவிலோ யாரும் பிச்சை எடுக்க முடியாது. எல்லாமே ஒரு உத்வேகத்தை, கொள்கையை கொண்டதாகவே இருக்கும். 'நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே'னு சொல்லிட்டு யாரும் தெருவுல பிச்சை கேட்க முடியுமா? முடியாதில்ல? அதை போலதான் விஜய் சாருக்கும் பெரிய ஃபேன்ஸ், ஃபாலோவர்ஸ் இருக்காங்க. அவரு சொல்ற விஷயங்கள் எல்லாம் பாடல், வசனம் என பெரிய அளவுல ரீச் ஆகணும்னு முடிவு செய்து வேலையை பார்த்தோம்.
சில நடிகர்களுக்கு குறிப்பிட்ட சென்டர்களில் மட்டும்தான் ரசிகர்கள் இருப்பார்கள். விஜய் சாரை பொறுத்த வரையில், அவருடைய கிராஃப் எல்லா சென்டர்களிலும் சமமாகத்தான் இருக்கும். அதை மனதில் வைத்துதான் ஒவ்வொன்றையும் செதுக்கினோம். 'அப்புல இருக்கிறவன் டவுன்ல வரதும், டவுன்ல இருகிறவன் அப்புல வரதும் ஒன்னும் பெரிசு இல்லை. எதிரியை எப்படி ஆப்பு வைச்சிட்டு ஜெயிக்கிறதுதான் மேட்டரு' என்ற வசனமும் அப்படி அமைந்ததுதான். இந்த வசனத்தை முதலிலேயே படத்துல வைக்கணும்னுதான் என் மனசில பிக்ஸ் பண்ணியிருந்தேன். அதை அப்படியே இயக்குநர் தரணி சார்கிட்ட சொன்னேன். அவர் சூப்பர், வைச்சிடலாமுன்னு சொன்னாரு. அவர்தான் என்னோட முதல் ரசிகன். அவருக்கு பிடிச்சதுனா அது ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக எப்போதும் இருக்கும்.
கில்லி படம் குறித்து நிறைய சுவாரசியமான அனுபவங்கள் இருக்கு. அதையும் தாண்டி நம்ம எழுதுற வசனங்களை அவர் எப்படி பேசுறாருனு பாக்குறதே பெரிய சந்தோஷமா இருக்கும். ஒரு வில்லனிடம் சொடக்கு போடற காட்சியாகட்டும் அல்லது நகைச்சுவையான வசனங்களாகட்டும் எல்லாவற்றையும் 100 சதவீதம் சிறப்பாக செய்து பிரமாதப்படுத்திவிடுவார். இப்ப கூட பாருங்க கில்லி படத்துல எல்லாமே கரெக்ட்டா இருக்கும். எந்த காட்சியும் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ தேவையில்லாமல் நீட்டா அமைந்திருக்கும்."