தெலுங்கில் கடந்த ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்த இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காதலும், பிரிவும், வலியும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. விஜய் தேவரகொண்டாவின் ஸ்டைல், ஆளுமை தெலுங்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அலையை உண்டாக்கியது. தாடி வைப்பதும் ராயல் என்ஃபீல்டு ஓட்டுவதும் அங்கு பெரிய ஃபேஷன் ஆனது. பாடல்களும் பின்னணி இசையும் மில்லியன் கணக்கில் யூட்யூப் வியூஸ் பெற்றன. தமிழகத்திலும் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் உருவாகினர். இப்படி சென்ற ஆண்டின் ட்ரெண்டாக இருந்த 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தைத்தான் நடிகர் விக்ரம் தன் மகன் துருவ்வை திரையுலகுக்கு அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்தார்.
தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய 'சேது' திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர் பாலாவையே தன் மகனது முதல் படத்தையும் உருவாக்கக் கேட்டுக்கொண்டார். பொதுவாக பாலா படங்கள் அதிக நாட்கள் தயாரிப்பில் இருக்கும். 'அவன் இவன்', 'பரதேசி', 'தாரை தப்பட்டை' படங்கள் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்த நிலையில், தன் நிலையை சரி செய்ய 'நாச்சியார்' திரைப்படத்தை குறுகிய காலத்தில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி வெற்றியை பெற்றார் பாலா. 'நாச்சியார்' வெளியான பின் திரைப்பட தயாரிப்பளர்களின் ஸ்ட்ரைக்கால் அடுத்து புதிய படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் ஒரு மாதத்திற்கும் மேல் வசூலை அள்ளியது நாச்சியார். 'கலகலப்பு 2' படமும் ஸ்ட்ரைக்கால் லாபம் பார்த்த இன்னொரு படம்.
'நாச்சியார்'க்கு பிறகு 'வர்மா' படத்தை இயக்கியுள்ளார் பாலா. இதுவரை ரீமேக் படங்களை எடுக்காத பாலா, தன் நண்பர் விக்ரமுக்காக அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்துள்ளார். அறிவிப்பு வெளிவந்த பொழுது சினிமா ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். பாலாவின் ஸ்டைலுக்கு சற்றும் சம்மந்தமில்லாத படத்தை எப்படி எடுப்பார் என்பதே அது.
தன் ஸ்டைலில் படத்தை மாற்றுவார் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று வெளிவந்த டீசர். கிட்டத்தட்ட அர்ஜுன் ரெட்டியை அப்படியே எடுத்திருப்பதைத்தான் காட்டுகிறது. இப்பொழுது ரசிகர்களின் ஒரே கேள்வி படத்தின் க்ளைமாக்ஸ் குறித்துதான் இருக்கிறது. 'அர்ஜுன் ரெட்டி', இறுதியில் இருவரும் சேர்ந்து மகிழ்ச்சிகரமாக முடியும் படம். ரணகளமான க்ளைமாக்ஸ்களுக்குப் பெயர் பெற்ற பாலா, 'வர்மா'வை எப்படி முடிப்பார் என்று பார்ப்போம்.