தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ரின்ஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 21- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன், 'கோபுரம் சினிமாஸ்' அன்புச்செழியன், கதாநாயகி மரியா ரியாபோஷாப்கா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்த கொண்டு பேசினர்.
அப்போது இயக்குநர் அனுதீப் பேசுகையில், "என்னுடைய முந்தைய படமான 'ஜதி ரத்னலு' முடித்துவிட்டு இதன் திரைக்கதை எழுதும்போது சிவா சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சிவா சாருக்கும் என்னுடைய ’ஜதிரத்தினலு’ படம் பார்த்து பிடித்திருந்தது. அவரிடம் பேசும் பொழுது காமெடி மட்டும் இல்லாமல் நல்ல மெசேஜ் இருக்க வேண்டிய கதையாக வேண்டும் என்றார். இந்த படம் ஒரு பண்டிகை மூடில் எல்லோரும் சிரித்து கொண்டாடும் விதமாக வந்துள்ளது. இதற்கு முன்பு பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோரின் நிறைய தமிழ் படங்களை பார்த்து இருக்கிறேன். எனக்கும் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த வாய்ப்பை இவ்வளவு சீக்கிரம் கொடுத்த சிவா சாருக்கு நன்றி. தீபாவளியன்று எல்லோரும் திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து மகிழுங்கள்” என்றார்.
'கோபுரம் சினிமாஸ்' அன்புச்செழியன் பேசுகையில்,"ப்ரின்ஸ் திரைப்படம் ஏறக்குறைய 650 திரையரங்குகளில் தமிழ்நாட்டில் மட்டும் வெளியாக இருக்கிறது. சிவாவின் மற்ற படங்களை போல இந்த படமும் வெற்றி பெற்றுவிடும். தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த ஹீரோவாக ஒரு சிலர் இருப்பார்கள். மறைந்த எம்ஜிஆர் ஐயா, பின்பு ரஜினி சார், விஜய் சார் அந்த வரிசையில் இன்று சிவகார்த்திகேயன் ஹீரோவாக இருப்பது மகிழ்ச்சி. இந்த தீபாவளி சிவகார்த்திகேயன் தீபாவளி என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோல நிறைய வெற்றி படங்களை கொடுக்க வாழ்த்துகள்" என பேசினார்.