கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடந்து வருகிறது. இதற்காக கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 19ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐயப்பன் சாமியை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். அந்த வகையில் மலையாள முன்னணி நடிகர் திலீப், ஐயப்பன் கோயிலுக்கு சென்றுள்ளார். அவருக்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தரிசனத்திற்கான முன்வரிசையில் மாலை கோவில் நடை அடைக்கும்வரை நின்றுள்ளதாக பேசப்படுகிறது. இது குறித்து மலையாளத்தில் செய்திகளும் வெளியாகியிருந்தது. திலீப்புக்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதால் மற்ற பக்தர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதி மன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் காவல் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஆகியோரிடம் சலுகையைப் பெற அவர்களுக்கு என்ன தகுதிகள் உள்ளன? குழந்தைகள் உட்பட பக்தர்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் போது ஒரு நடிகருக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்பு விருந்தோம்பல் சாதாரண பக்தர்களின் உரிமையைப் பறிக்கவில்லையா? எனப் பல்வேறு கேள்விகளை அடுக்கியது நீதிமன்றம். பின்பு திலீப்புக்கு விஐபி தரிசனம் கொடுத்ததற்கான காரணம் என்ன என்றும், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.