கார்த்திகி கோன்சால்வேஸ் இயக்கத்தில் குனீத் மோங்கா தயாரித்திருந்த ஆவணக் குறும்படம் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பராமரிப்பு பணியாளர்களாக பணியாற்றி வருகின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி, தாயைப் பிரிந்து உடம்பில் காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானையை ரகு எனப் பெயரிட்டு வளர்த்து வந்ததை குறித்து இப்படம் எடுக்கப்பட்டது.
இப்படம் 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் விருது வாங்கியது. இந்த விருதின் மூலம் உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்தனர் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி. இவர்களை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். பின்பு பிரதமர் மோடி கடந்த மாதம் தமிழ்நாடு வந்த நிலையில் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகை தந்து பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியை பாராட்டினார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்துள்ளார். உடன் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வேஸ் இருந்தார். அப்போது சிஎஸ்கே ஜெர்சியை மூன்று பேருக்கும் பரிசாக வழங்கினார். அவர்களுக்கு கொடுத்த ஜெர்சியில் அவர்களின் பெயரும் 7 ஆம் நம்பரும் குறிப்பிடப்பட்டுள்ளது.