அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்துத் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
மேலும் தனது 50வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷே இயக்கி நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மீண்டும் இந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' (Tere Ishk Mein) என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. அப்போது விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனப் படக்குழு கூறிய நிலையில் தற்போது வரை தொடங்கப்படாமலே இருந்தது.
இந்நிலையில் இப்படம் பற்றிய ஒரு அப்டேட்டைப் படக்குழு பகிர்ந்துள்ளது. நாளை (28.07.2023), தனுஷின் பிறந்தநாள் என்பதால் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் தனுஷின் 51வது படமாக உருவாகுவதாகவும் இது தொடர்பான போஸ்டரையும் பகிர்ந்துள்ளது. அப்போஸ்டரைப் பார்க்கையில் மும்பையில் உள்ள தாராவி பகுதிக்கும், அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் இடையே நடக்கும் அரசியல் குறித்துப் பேசவுள்ளதாகத் தெரிகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதே தாராவி பகுதியில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'காலா' படம் தனுஷ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.