
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து வருபவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விரத பர்வம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பு சாய் பல்லவி விளம்பரப்படுத்தும் பணியின் போது ஒரு பேட்டியில், "காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், கரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித் தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்" என்று பேசியிருந்தார். சாய்பல்லவியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. இவரின் இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக சாய்பல்லவி விளக்கமளித்து ஒரு வீடியோவையம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சாய் பல்லவி மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பஜ்ரங் தள அமைப்பின் உறுப்பினர் அகில் என்பவர் ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்பு ஒரு பிரிவினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக சாய்பல்லவிக்கு ஐதராபாத் காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். போலீசார் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாய் பல்லவி தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் சாய் பல்லவியின் மனுவை விசாரித்த தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.