அர்ஜூன் ரெட்டி, கபிர் சிங் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள படம் ‘அனிமல்’. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தன்னா, அனில் கபூர், பாபி தியோல், சக்தி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 4 பேர் தயாரித்துள்ளனர். 8 பேர் இசையமைத்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 1ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும் ஆலியா பட், த்ரிஷா, அல்லு அர்ஜூன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் படக்குழுவை புகழ்ந்து தள்ளினர்.
இதனிடையே இப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் ரஞ்சீத் ரஞ்சன். நாடளுமன்றத்தில் பேசிய அவர், “என் மகளும் மற்ற குழந்தைகளும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அழுதுகொண்டே பாதியில் தியேட்டரை விட்டு வெளியேறினர். வன்முறை மற்றும் பெண் வெறுப்பை நியாயப்படுத்தும் திரைப்படம். வெட்கக்கேடானது. சினிமா என்பது சமூகத்தின் கண்ணாடி. நாங்கள் அதை பார்த்து வளர்ந்தவர்கள், கபீர் சிங்கில் தொடங்கி புஷ்பா வரை இப்போது அனிமல் என தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவுக்கும் மேலாக, அதிக வன்முறை மற்றும் பெண்களை துன்புறுத்துதல். இதுபோன்ற விஷயங்களை படங்களில் காட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை. 'கபீர் சிங்' படத்தில் அவர் தனது மனைவி, மக்கள், சமூகம் ஆகியவையை எப்படி நடத்துகிறார். அதை அவர் நியாயப்படுத்துவதாகவும் காட்டுகிறார்கள். இது மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம். இந்தப் படங்களில் வன்முறை, நெகடிவ் கதாபாத்திரங்கள் வருவது, இன்றைய 11, 12ஆம் வகுப்புக் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் இதையே முன்மாதிரியாகக் கருதத் தொடங்கிவிட்டனர். ஏனெனில் நாம் அதை படங்களில் பார்க்கிறோம், சமூகத்திலும் இதுபோன்ற வன்முறையை பார்க்கிறோம்” என்றார்.
மேலும் பஞ்சாப்பின் போர் கீதமான Arjan Valley பாடலை ரன்பீர் கபூர் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தும்போது பயன்படுத்தப்பட்டது மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.