'செஸ் ஒலிம்பியாட் 2022', 1927-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இப்போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் நடக்கவுள்ளது. அதன் படி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளிலிருந்து 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ள இந்த போட்டிகளின் தொடக்க விழாவை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. அதற்கான பணிகள் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான விளம்பர படத்தையும் விக்னேஷ் சிவன் இயக்குகிறார், ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த தகவல் வெளியான நிலையில் இதற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தில் நடைபெற்றவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின், படப்பிடிப்பில் நடித்துள்ளாரா அல்லது கண்காணிக்க சென்றுள்ளாரா என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.