கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது. இதனை எதிர்த்து நடிகர்கள் சங்க உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் நடிகர் சங்க தேர்தலுக்கு உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்றும் தேர்தல் சென்னையில் மட்டுமே நடைபெற்றதால் அனைத்து உறுப்பினர்களாலும் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், கூறப்பட்டுள்ளது அத்துடன் இந்த தேர்தல் செல்லாது என்றும், மறு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரியும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நடிகர் சங்க தேர்தல் ,செல்லாது என்றும், மீண்டும் புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்து மூன்று மாதத்திற்குள் மறு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் விசாரணையில் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு மறு தேர்தல் தேவையில்லை என்றும், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் செல்லும் என்று கூறிய உயர் நீதிமன்றம், தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.