திரைப்படங்களை தாண்டி பல விளம்பர படங்களில் நடித்து வரும் அமிதாப் பச்சன், ஆன்லைன் வணிகத் தளமான ஃப்ளிப்கார்ட் நிறுவன விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஆண்டுதோறும் அந்த நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகையான ‘பிக் பில்லியன் டே’ இந்தாண்டு வருகிற 8 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை விளம்பரப்படுத்தும் பொருட்டு அதன் விளம்பரப் படத்தில் நடித்த அமிதாப் பச்சன் நடித்த விளம்பரம், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் "சில்லறை விற்பனைக் கடைகளில் இது போன்ற மொபைல்களுக்கான ஆஃபர்கள் கிடைக்காது" என்ற வசனத்தை பேசியிருந்தார்.
இந்த வசனம் நுகர்வோரை தவறாக வழி நடத்துவதாக சிஏஐடி பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். மேலும் நாட்டின் சிறு சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராக அமைந்துள்ளதாகவும் அந்த விளம்பரத்தை திரும்பப் பெறவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃப்ளிப்கார்ட் மீது அபராதம் விதிக்கப்படவும் அமிதாப் பச்சனுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.