கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது சிவகுமார், சூர்யா, ஜோதிகா இயக்குநர்கள் அட்லீ, எஸ்.ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். அண்மையில் ரஜினி படத்தை பார்த்து கமலிடம் தொலைப்பேசியிலும் சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்தும் பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எ.ஏ. செல்வப்பெருந்தகை இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “காஷ்மீர் எல்லையில் ராணுவம் எப்படி இயங்குகிறது, அங்கிருக்கும் சவால்கள், தீவிரவாதத்தால் காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நேரில் பார்த்து தெரிந்து கொள்வதைப் போல தத்ரூபமாக அமரன் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய திரைப்படங்களை எடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. துணிந்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிவகார்த்திகேயனுக்கு இது வாழ்நாள் கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. மிடுக்கான தோற்றப் பொலிவு, கச்சிதமான நடிப்பு, சண்டைக் காட்சிகளில் கடுமையான உழைப்பு, வீரத்தையும், தியாகத்தையும் ஒருசேர உணர்த்துவதில் அபார சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். காலத்தால் அழியாத கருவூலமாக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. அவரது நடிப்பு என்றும் பேசப்படும், போற்றப்படும்.
நமது மண்ணையும், நாட்டையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை இத்திரைப்படம் தெளிவாக உணர்த்துகிறது. இத்திரைப்படத்தை இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும். இத்திரைப்படத்தை பார்ப்பதன் மூலமாக அவர்களிடையே நாட்டுப் பற்று நிச்சயம் வளரக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இது இன்றைய காலத்தில் மிகமிக அவசியமாகும். அமரன் திரைப்படத்திற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து, தமிழக மக்கள் அனைவரும் பார்க்கக் கூடிய வாய்ப்பை வழங்குகிற வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில், அனைத்து பள்ளி மாணவர்களும் பார்க்கிற வகையில் கல்வித்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பி அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமேயானால், மாணவர்களிடையே தேசபக்தி உணர்வை மேலோங்க செய்வதற்கு இதைவிட ஒரு அரிய வாய்ப்பு நமக்கு கிடைக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அமரன் படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போது, “இந்தப் படத்தை பள்ளி, கல்லூரி குழந்தைகளுக்கு இலவசமாக போட்டுக் காட்ட வேண்டும். மாநில முதல்வர் ரசித்த அமரன் படத்தை மாணவ செல்வங்களும் ரசிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.