அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. உலகம் முழுவதும் 300 கோடி வரை இப்படம் வசூல் ஈட்டியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சமீபத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்திலும், நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பிகில் படத்திற்காக ஏ.ஜி.எஸ் நிறுவனம் அன்புச்செழியனிடம் ஃபைனான்ஸ் பெற்றிருக்கிறது என்று ஒரு செய்தி பரவியது.
நெய்வேலி ஷூட்டிங்கிலிருந்த விஜய்யை அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அவருடைய வீட்டில் எந்தவித சொத்துக்களோ பணமோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று அறிக்கை வெளியானது.
ஏ.ஜி.எஸ் நிறுவன அலுவலகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற சோதனைக்கு பின்னர் முறைகேடான சொத்துக்கள் குறித்து எந்த ஆவணங்களும் கிடைக்காத நிலையில் அதிகாரிகள் சோதனையை முடித்துக்கொண்டனர். அச்சமயத்தில் ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் சுமார் 77 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறையினர்.
இந்நிலையில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் நெருங்கிய வட்டாரத்தில் ஐடி ரெய்ட் குறித்து விசாரித்தபோது, “முதல் படத்திலிருந்தே ஏ.ஜி.எஸ் நிறுவனம் வெளியே ஃபைனான்ஸ் வாங்காமல் தங்கள் பணத்திலிருந்துதான் படம் பண்ணுகிறார்கள். பிகிலும் கூட அப்படி தயாரிக்கப்பட்ட படம்தான். அன்புச்செழியனிடம் ஃபைனான்ஸ் வாங்கி இந்தப் படத்தை எடுக்கவில்லை. அவருக்கும் பிகில் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதேபோல ஐடி ரெய்டும் வழக்கமாக நடைபெறும் சோதனையாகவே இருந்ததே தவிர, எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆனால், வெளியே வேறு மாதிரி செய்திகள் வருவதால் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தினர் வருத்தத்தில் இருக்கின்றனர்” என்று கூறினார்.