தமிழில் ரஜினி, கமல், அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் பாடல்களுக்கு பாடியவர் பாடகர் பென்னி தயால். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் விமான நிலையங்கள் குறித்து ஒரு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது எந்த ஒரு விமான நிறுவனமும் இசை சம்பந்தமான கருவிகளை சரியாக கையாளுவதில்லை. அதனால் இசைக் கருவிகள் உடைந்து விடுவதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு இசைக் கலைஞர்களும் கடுமையாக உழைத்து தனக்கு ஆசையான கருவிகளை வாங்குகிறார்கள். அதனை வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது விமானம் மூலம் எடுத்து வருகின்றனர். அந்த இசை கருவிகளை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்று விமான ஊழியர்கள் நினைக்க வேண்டும். ஆனால் பலர் அப்படி பார்ப்பதில்லை. இசைக்கருவிகள் விமான பயணத்தில் உடைந்ததாக பல இசைக் கலைஞர்கள் குறை கூறியுள்ளார்கள்.
அது எனக்கும் நடந்திருக்கிறது. ஒரு முறை நான் விமானத்தில் பயணிக்கையில் என் இசைக் கருவிகள் அனைத்தும் 7 நாள் இடைவெளியில் உடைந்த நிலையில் கிடைத்தன. அந்த உடைந்த கருவிகளுக்கு அந்த விமானம் நிறுவனம் தான் பொறுப்பேற்று திருப்பி தர வேண்டும். ஊழியர்களுக்கு கருவிகளை எப்படி கையாள வேண்டும் என்பதை நிறுவனங்கள் சொல்லி கொடுக்க தவறுவதால் மீண்டும் மீண்டும் எங்களுடைய இசைக்கருவிகள் உடைந்த நிலையிலே எங்களுக்கு கிடைக்கிறது. ஆனால் அதற்கு நீங்கள் கொஞ்சம் கூட பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டுகிறீர்கள். இப்படியான மனப்போக்கை ஏற்ற கொள்ள முடியாது.
ஒவ்வொரு முறையும் நாங்கள் அனைத்து லக்கேஜுக்கும் உரிய கட்டணம் செலுத்துகிறோம். இசை கருவிகளை முறையாக பேக் செய்தும் தருகிறோம்.அதனால் தயவு செய்து கெஞ்சி கேட்கிறேன். கருவிகளை பொறுப்புடன் கையாளுங்கள். கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்" என் கோவமாக பேசியுள்ளார்.