பல படங்களில் தன்னுடைய குணச்சித்திர நடிப்பினால் நம்மை ஈர்த்த நடிகர் பக்ஸ் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்காக நாங்கள் பல மாதங்கள் ரிகர்சல் செய்தோம். அதனால் ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் பலமுறை நடித்துப் பார்த்தோம். படத்தில் எப்போதும் நாங்கள் விஜய் சேதுபதியோடு இருப்பது போன்று எங்களது கேரக்டர்கள் அமைந்தன. அந்தப் படத்தின் கதை பல்வேறு மொழிகளில் வெற்றி பெற்றது. ஜிகர்தண்டா படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். என்னுடைய நடிப்பை கார்த்திக் சுப்புராஜ் வெகுவாகப் பாராட்டினார். 96 படமும் சிறந்த ஒரு அனுபவம். இயக்குநர் பிரேம் நல்ல நடிப்பிற்கு முக்கியத்துவம் தருவார்.
நானும் விஜய் சேதுபதியும் ரொம்ப க்ளோஸ் நண்பர்கள் என்று பலர் நினைக்கின்றனர். நாங்கள் நல்ல நண்பர்கள் தான். ஆனால் வருடத்திற்கு ஒருமுறை ஃபோனில் பேசுவதே பெரிய விஷயம். 96 படத்தில் என்னுடைய நடிப்பை அவர் மிகவும் பாராட்டினார். அவ்வப்போது பேசினாலும் சிறந்த ஒரு நண்பர் அவர். தியாகராஜன் குமாரராஜாவின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அந்த வாய்ப்பு சூப்பர் டீலக்ஸ் படத்தில் எனக்கு கிடைத்தது. அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஒரே படத்தில் எனக்கு நிறைவேறியது.
ஃபகத் பாசில் சிறந்த ஒரு நடிகர். சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவரோடு நடித்தது அருமையான அனுபவம். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தபோது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா என்னுடைய கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பார். சில சொந்த வசனங்களையும் சேர்த்துக்கொள்ள அனுமதிப்பார். படத்தை மெருகேற்றுவதே அவருடைய நோக்கம். அதனால் அந்த படப்பிடிப்பு மிகவும் நல்ல ஒரு அனுபவமாக இருந்தது.