இந்திய சினிமாவில் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு வித்தியாசமான முயற்சி செய்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும் நடிகர் ஆயுஷ்மான் குரானா. இவரது நடிப்பில் வெளியான கடைசி ஏழு படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த வருடத்தின் இவரது நடிப்பில் முதல் படமாக வெளியாகவுள்ள படம்‘சுப் மங்கள் ஸ்யாதா சாவ்தான்’. இதில் ஆயுஷ்மான் குரானா மற்றும் ஜிதேந்திர குமார் ஓரினச்சேர்கையாளர்களாக நடிக்கின்றனர். இவ்விருவரின் காதலையும் புரிந்துக்கொள்ளாத குடும்பத்தாருக்கும் சமூகத்திற்கும் ஓரினச்சேர்கை என்பது இயற்கையானதே என்பதை உணர்த்துவதுதான் இப்படித்தின் கதை.
இதுவரை வெளியாகியுள்ள படத்தின் ட்ரைலரும், பாடல்களும் பலரை ஈர்த்துள்ள நிலையில் இப்படத்தை ஹோமோபோபிக்தான் பார்க்க வேண்டும், அவர்கள்தான் இப்படித்தின் டார்கெட் ஆடியன்ஸ் என்று ஆயுஷ்மான் குரானா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எல்ஜிபிடி சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த படத்தை பார்த்து புரிந்துக்கொள்ள எதுவும் இல்லை, ஒரினச்சேர்க்கையாளர்களை பார்த்தாலே வெறுப்படைபவர்களும், பயப்படுபவர்களும்தான் இதை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.