அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 7 ஆம் தேதி வெளியான படம் 'ஜவான்'. ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. இன்று வரை ரூ. 900 கோடியைக் கடந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் ரூ.1000 கோடியைத் தொடவுள்ளதாகத் தெரிகிறது.
இந்த வெற்றியின் காரணமாக மும்பையில் சமீபத்தில் வெற்றி விழா நடத்தியது படக்குழு. இதையடுத்து இந்த வெற்றி தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ, விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்ததாகக் கூறினார். அவர் பேசியது, "விஜய் சார் மற்றும் ஷாருக் சார் இருவருமே 'ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க, நாங்க இணைந்து நடிக்கிறோம்' என ஒரே கருத்தைச் சொன்னார்கள். அவர்கள் ஏதோ என் பிறந்தநாளுக்குப் பரிசாகச் சொல்கிறார்கள் என நினைத்தேன். ஆனால் அடுத்த நாள் விஜய் சார் எனக்கு மெசேஜ் செய்தார். நீங்கள் அப்படி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால், நான் நிச்சயமாக அதில் நடிப்பேன் என்றார். உடனே என் அருகில் இருந்த ஷாருக் சார், 'சார், நீங்கள் இதைப் பற்றி தீவிரமாக இருக்கிறீர்களா? நாம சேர்ந்து படம் பண்ணுவோம் என சொன்னார்" என்றார்.
கடந்த வருடம் அட்லீயின் பிறந்தநாள் விழாவில் விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் கலந்து கொண்டனர். இதையடுத்து நாளை (21.09.2023) அட்லீ தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.