90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மைக் கதையை மையமாக வைத்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார். கடந்த 11 ஆம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
இருப்பினும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் இப்படத்தை பாராட்டி ப்ரொமோட் செய்து வருகின்றனர். இதனிடையே பாஜக ஆளும் ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என டெல்லி சட்டமன்ற கூட்டத்தொடரில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "நாடு முழுவதும் பாஜகவினர் இப்படத்திற்கு போஸ்டர் ஒட்டுகிறார்கள். இதை செய்யவா நீங்கள் அரசியலுக்கு வந்தீர்கள். இந்தியாவை 8 ஆண்டுகள் உங்கள் பிரதமர் ஆட்சி செய்த பிறகும் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியிடம் நீங்கள் தஞ்சம் அடைகிறீர்கள் என்றால் பிரதமர் மோடி இதுவரை எதையும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு ஏன் வரி விலக்கு கேட்கிறீர்கள்? உங்களுக்கு வேண்டுமானால் படத்தின் தயாரிப்பாளரிடம் பேசி யூடியூபில் போட சொல்லுங்கள். இலவசமாக ஒரே நாளில் அனைவரும் பார்ப்பார்கள்" என கடுமையாக சாடியுள்ளார்.