அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'லேபில்'. இந்தத் தொடரில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ள நிலையில் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ள இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். இவர் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற ஸ்வீட் பிரியாணி குறும்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீரிஸ் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. இந்த நிலையில் லேபில் சீரிஸ் குறித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து அருண்ராஜா காமராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நவம்பர் 10, 2023 முதல் இன்று வரை 8 வாரங்கள். லேபிலின் கருவாக்கம், உருவாக்கம் மற்றும் வெளியீடு இவை அனைத்தும் எங்களின் சிறுசிறு ‘பெருங்கனா’. இப்படைப்பின் கரு நம் அனைவரின் ஏதோ ஒரு குரலற்ற இயலாமையின் குரலின் தொடக்கமாய் துவங்கி, கதை கண்டு, களம் கண்டு, வடிவம் கண்டு, இன்று முதல் அத்தியாயம் இன்னும் சில கேள்விகளுடனேயே நிறைவு பெறுவது நீண்ட நெடிய சுமத்தலுக்குப் பின் பிரசவிக்கும் ஓர் உணர்வு.
பிரசவித்தலுக்கான காலமே எட்டு வாரங்கள். அதை ஒரு நாளும் உணர்விக்கத்தவறவில்லை இக்குழந்தை. ஒவ்வொரு அரை மணியும் ஒரு பெரும் வாரமாய் மாறி எட்டி உதைக்கவும் தவறியதில்லை உங்களின் அன்பு மட்டுமே இக்குழந்தையை வளர்த்து இதில் உழைத்த அனைவருக்கும் சுகமாய் முழுதாய் பிரசவித்துக் கொடுத்திருக்கிறது. உங்கள் அன்பைப் பெற பாடுபட்ட என்னுடன் தோள் சேர்த்து அதை கோபுரம் ஆக்க, என் அன்புக்காக மட்டுமே அயராது சுழன்ற ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும்... ஒவ்வொருவரும் என்றுமே எனக்கான பொக்கிஷங்கள். உங்களால் மட்டுமே ‘லேபில்’ சாத்தியம் ஆகியுள்ளது.
பல்வேறு சிந்தனைகள், பல்வேறு மனநிலைகள், பல்வேறு நிலைப்பாடுகள், நெருங்கிய ஆளுமைகளின் மறைவுகள் பல்வேறு காலநிலை மாறுதல்கள்.. தொடர் இடர்கள், நிலையற்ற சூழ்நிலைகள், அடுத்தடுத்த முன்னெடுப்புகள், மாபெரும் இழப்புகள், சவால்கள் இவை அனைத்திற்கும் மத்தியில் வந்து நின்ற பொழுது, அப்போதைய மனநிலையில் இப்படைப்பு வீரியம் மாறி மாறி, தொடர்பற்று, உங்கள் அன்பை இழந்திருக்கக் கூட ஒரு வாய்ப்பிருந்திருக்கும். அல்லது முற்றிலும் பெற முடியாமல் தவித்திருக்கும். இவை எதுவும் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாது போனதாலேயே இந்த நீண்ட நெடிய விளக்கம். எல்லா கலை படைப்புமே எல்லாரையுமே திருப்தி படுத்திவிடுமா அப்படி பண்ண முடியுமான்னு தெரியல.. ஆனா அத பண்ண ஒவ்வொரு முறையும் கலை தன்னை தயார் செய்து கொள்ளும். அதனை முடிந்தவரை முயன்று முடிப்போம், முடியும் வரை முயல்வோம்” என்றார்.