கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே வருகிறது. அதேபோல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என்று அறிவுரை பலர் தெரிவித்தாலும், சிலர் இதன் அவசியம் புரியாமல் இன்னமும் வெளியேறுகின்றனர்.
இதனைக் கண்டிக்கும் விதமாகவும், அவர்களுக்கு அதன் அவசியத்தை புரியவைக்கும் விதமாகவும் நடிகர் அர்ஜுன் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... “எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள். இது உங்களுக்காக மட்டுமல்ல, வயதான தாய், தந்தை, குழந்தை, குடும்பம் அனைவரையும் காப்பாற்றும் முயற்சியாகும். கொரோனா வைரஸ் தும்மினால், இருமினால் பரவும் என்று கூறினர். ஆனால் இப்போது காற்றிலும் இது இருக்கிறது என்கின்றனர். எனது நண்பர் ஒருவர் இத்தாலியில் நர்சாக இருக்கிறார். அவரிடம் பேசும்போது இத்தாலியில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. அதில் 600 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று கூறினார். இதன் மூலம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணருங்கள். கொரோனா வைரஸ் ஆபத்து தெரிந்தும் வெளியே ஜாலியாக சுற்றுவதை நிறுத்துங்கள். வீட்டில் இருங்கள். குடும்பத்தையும், நாட்டையும் காப்பாற்றுங்கள்" எனக் கூறியுள்ளார்.