கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே போகிறது. அதேபோல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் ஐந்து லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வட அமெரிக்காவில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிகளை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அதில்...
''என்னுடைய இசையை உலகம் முழுவதும் உள்ள என் ரசிகர்களிடம் சேர்ப்பதை விட முக்கியமான விஷயம் வேறு எதுவும் எனக்கு இல்லை. துரதிர்ஷ்டவசமாக , இது நாம் நம் குடும்பத்தோடு வீட்டில் இருக்க வேண்டிய தருணம். எனவே உங்கள், என் ரசிகர்கள், என் குடும்பம் மற்றும் என் இசைக்குழுவினர் ஆகியோரது நலன் கருதி மே மற்றும் ஜூன் மாத வட அமெரிக்கச் சுற்றுலாவை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கிறேன். அந்த தருணத்தில் நாம் மீண்டும் ஒன்றிணைந்து சமூகத்துடன் இசையைப் பகிர்ந்து கொள்ளலாம். நிச்சயமாக உங்களிடம் அது குறித்து காலப்போக்கில் தெரிவிப்பேன். அனைவரது பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.