சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என வருண் என்கிற உதவி இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மீது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இந்த சங்கத்தின் தலைவர் பாக்யராஜும் இந்த இரண்டு கதைகளிலும் ஒற்றுமை உள்ளதாக பகிரங்கமாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதற்கு முன்பாகவே இவ்விரு தரப்பிற்கும் சமரசம் ஆகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு உதவி இயக்குனர் தனக்கு முன்பே இதுபோன்ற கதை கருவை சிந்தித்துள்ளதால் அவரை கௌரவிக்கும் வகையில் நன்றி தெரிவிக்குமாறு பாக்கியராஜ் கேட்டுக்கொண்டதாகவும், அதனை ஏற்றுகொண்டதாகவும் தெரிவித்துள்ளார் முருகதாஸ். இந்நிலையில் இந்த கதை என்னுடையதுதான் என்றும், உதவி இயக்குனருக்கு அதேபோன்று ஒரு யோசனை வந்துள்ளதால் நன்றி தெரிவிக்கும் வகையில் மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளேன். இது என் கதை, திரைக்கதை, இயக்கம்தான் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக எழுத்தாளர் சங்கமும் அறிக்கை அனுப்பியுள்ளது அதில் தெரிவித்துள்ளதாவது:
”தேர்தலில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையான ஓட்டை கள்ள ஓட்டு போடுவது நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் அபாயகரமான குற்றம் ஆனால் இது பொது நிகழ்வாக இன்றும் தொடர்கிறது.
இந்த அநீதியை எதிர்த்து தன் ஓட்டை இழந்த ஒரு ஹீரோ போராடி நீதியை நிலைநாட்டி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கினால் எப்படி இருக்குமென எனக்கு கருவாக ஒரு கற்பனை உதித்தது பின் மாதக்கணக்கில் விவாதித்து திரைக்கதை எழுதி சர்கார் என்ற திரைப்படத்தை இயக்கி எடுத்தேன்.
இதே கற்பனைகளை ஒரு உதவி இயக்குனர் திரு. வருண் ராஜேந்திரனுக்கும் உதித்து. எனக்கு முன்பே எங்களது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது.
அதே ’கரு’வை அவரும் சிந்தித்து எனக்கு முன்பே பதிவு செய்து இருந்த படியால், வளர்ந்துவரும் உதவி இயக்குனர் திரு. வருண் ராஜேந்திரனை பாராட்டி அவர் உழைப்பையும் கௌரவிக்கும் வகையில், இதை பதிவு செய்து ஊக்குவிக்கிறேன்.
திறமையுள்ள ஒரு சக உறுப்பினரை திரை உலகுக்கு அடையாளம் காட்டிய நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முருகதாஸ் தென்னிந்திய திரப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.