Skip to main content

பாலியல் தொல்லை விவகாரம் - நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

Published on 30/08/2024 | Edited on 30/08/2024
Another case filed against actor Jayasurya regards hema committee report

பாலியல் ரீதியான குற்றங்கள் நீண்ட காலமாக நடந்து வருவதாக ஹேமா கமிஷன் வெளியிட்ட அறிக்கை, மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  பிரபல நடிகை ஒருவர் கடந்த 2017ஆம் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து படப்பிடிப்பில் நடிகைகள், வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை குழு செய்த ஆய்வறிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையை வெளியிடாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது
 
இந்த அறிக்கைக்கு பிறகு தொடர் பாலியல் தொல்லை புகார்களை பல நடிகைகள் தெரிவித்து வரும் நிலையில். பல நடிகர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீலேகா மித்ரா, மலையாள இயக்குநர் ரஞ்சித் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து மலையாள சினிமா அகடாமி தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் ரஞ்சித். அதைத்தொடர்ந்து அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. நடிகை ரேவதி சம்பத், நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். இதை இவரும் மறுத்திருக்க சித்திக் தனது நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார். அதைத்தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதனிடையே தொடர் பாலியல் தொல்லை புகாரில் நடிகர் சங்க நிர்வாகிகள் சிக்கி வரும் நிலையில், நடிகர் சங்க பதிவியிலிருந்து மோகன்லால் உட்பட 17 சங்க நிர்வாகிகள் தங்களது பதவிகளை தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருந்தனர். 

நடிகை மினுமுனீர், கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. முகேஷ் மற்றும் நடிகர் ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், அவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இதையடுத்து கேரள அரசின் குழுவில் இருந்து எம்.எல்.ஏ. முகேஷ் நீக்கப்பட்டார். அதன் பின்பு முன் ஜாமீன் கோரி அவர் வழக்கு தொடர்ந்த வழக்கில், அவரை 5 நாட்களுக்கு கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நடிகை மினுமுனீரையடுத்து பிரபல நடிகை ஒருவர் ஜெயசூர்யா மீது புகார் தெரிவித்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு தொடுபுழாவில் நடந்த படப்பிடிப்பின்போது பாலியல் ரீதியாக அவர் தன்னிடம் அத்துமீறியதாக புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்