விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக இருந்தது. மேலும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அண்மையில் தனது 68வது படத்தை முடித்தவுடன் சினிமாவில் இருந்து 3 வருடம் விலகி, வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்துச் செயல்படத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து கடந்த 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பனையூரில் தனது மக்கள் இயக்கம் சார்பாக 234 தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோனை நடத்தினார். இன்று 234 தொகுதிகளிலும் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 'தளபதி விஜய் பயிலகம்' ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிலையில் விஜய்யின் பயிலகம் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "நல்ல விஷயம் தானே. மாணவர்களுக்காக பண்றார். எங்களுடைய இல்லம் தேடிக் கல்வியினுடைய கான்செப்டே அதானே. கொரோனா காலத்தில் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களை சேர்ப்பதற்கான பணிகளை செய்து வருகிறோம். தன்னார்வலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய்யும் செயல்படுகிறார்" என்றார்.