'அம்மா கிரியேஷன்ஸ்' சிவா என்றால் சினிமா வட்டத்தையும் தாண்டி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம். 'பூந்தோட்ட காவல்காரன்' தற்போது சார்லி சாப்ளின் 2 வரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆக்டிவான தயாரிப்பாளராக இருப்பவர். தயாரிப்பாளர் சங்கத்திலும் ஆக்டிவ்வாக இருப்பவர். சமீபத்தில் இவர் தயாரித்து வெளியாகியுள்ள சார்லி சாப்ளின் 2 படத்தை தரக்குறைவாக விமர்சித்ததாகவும் பணம் கேட்டு மிரட்டியதாகவும் ப்ளூ சட்டை மாறன் என்று அழைக்கப்படும் தமிழ் டாக்கீஸ் இளமாறன் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அவரிடம் பேசினோம்...
ஒரு திரைப்பட விமர்சகர் மேல காவல்துறையில் புகார் அளிக்கும் அளவுக்கு என்ன நடந்தது?
'தமிழ் டாக்கீஸ்' மாறன் சார்லி சாப்லின் 2 படத்தை விமர்சனம் செய்திருக்கிறார். அதில் “இன்னமும் இவனுங்க அப்டேட் ஆகாம படம் எடுத்து வச்சிகிட்டு நம்ப உசுர வாங்குரானுக, வாட்ஸ் ஆப்ல டெலிட் ஃபார் எவரி ஒன்னு ஆப்ஷன் இருக்கு. அது கூட தெரியாம படம் எடுக்குரானுக” என்று ஒருமையில் அவர் இஷ்டத்துக்குப் பேசியிருக்கிறார். நாங்கள் படத்தில் தெளிவாகக் கூறியுள்ளோம், ஒரு மணி நேரத்துக்குள்ளாக மட்டுமே அவ்வாறு டெலிட் செய்ய முடியும். அதை வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் கேட்டும் உறுதிசெய்துகொண்டோம். இதை எங்கள் இயக்குனர் சக்தி சிதம்பரம் மாறனிடம் ஃபோனில் தெரிவித்து மறுப்பு கூறும்படி கேட்டபோது “அதெல்லம் நான் சொன்னது சொன்னதுதான், மாத்த முடியாது” என்றும் “மறுப்புக் கொடுத்தா எனக்கு என்ன பெனிஃபிட்” என்றும் கேட்டுள்ளார். தன் விமர்சன வீடியோவில் இந்தப் படத்துக்குப் போகவேண்டாம் என்று கூறுகிறார், இதற்கே அவர் மீது வழக்கு தொடரலாம். இவ்வாறு விமர்சனம் என்ற பெயரில் அநாகரீக சொற்களை பயன்படுத்தியும் அவருக்கான சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கையை அதிகப் படுத்திக்கொள்ள படங்களை திட்டியும் வருகிறார். அதிலும் முக்கியமாக அவருக்கு விளம்பரம் என்ற பெயரில் பணம் கொடுப்பவர்களுக்கு சாதகமாகவும் தராதவர்களின் படங்களுக்கு கடுமையாகவும் விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற ஏக்கம் நிறைய பேருக்கு உண்டு. எனவே முதலில் நான் புகார் கொடுத்துள்ளேன். என்னைத் தொடர்ந்து பலர் புகார் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் இது போன்ற ஆட்கள் யூ-ட்யூபில் இருந்து வெளியேறும் நிலையை சட்டபூர்வமாக உருவாக்குவோம். ஒருவருக்குக் கிடைக்கும் தண்டனையைப் பார்த்து மற்றவர்கள் நாகரீகமாக விமர்சிப்பார்கள்.
அப்போ விமர்சனங்கள் வேண்டாம்னு சொல்றீங்களா?
விமர்சனங்கள் ரொம்ப முக்கியம், விமர்சனங்களால் ஒரு படம் தோல்வியடைவதில்லை. ஆனால் விமர்சனத்தால் ஒரு படம் வெற்றியடையும். நாகரீகமாகவும் தொழில்நுட்ப ரீதியிலும் விமர்சிக்கிற நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடையே மாறன் போன்றோரும் இருக்கிறார்கள். சினிமா ஒரு தொழில்தான், ஒரு படத்தை நம்பி பலருடைய குடும்பங்கள் இருக்கின்றன. அதனை மனதில் வைத்து நாகரீகமாக விமர்சிக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு பிஸ்கட் நிறுவனத்தின் பிஸ்கட்டை கையில் வைத்துக்கொண்டு இதை வாங்காதீர்கள் என விமர்சனம் செய்ய முடியாது. அதற்கான காப்பிரைட் சட்டம் கடுமையானது. சினிமாவுக்கு அவ்வாறு இல்லை என்பதே பிரச்சனை. படம் வெளியாகி ஒரு நாள் மட்டும்தான் விமர்சகர் சொல்வதை கேட்டு படத்துக்கு வருவார்கள். அதன் பிறகு படம் பார்த்தவன் பேச்சைக் கேட்டுதான் கூட்டம் வருகிறது. தான் நம்பிப் பிழைக்கும் சினிமா துறையை அழிக்கும் வேலையை மாறன் போன்றவர்கள் செய்கிறார்கள். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
விமர்சகர்கள் ஒரு பக்கம் இருக்க, இந்த தமிழ் ராக்கர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கே... அதை ஒழிக்கவே முடியாதா?
இதுல சாபக்கேடு என்னனா, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ராக்கர்ஸ்னு எதுவும் இல்லை. தமிழ் ராக்கர்ஸ் மட்டும்தான் இருக்கு. அதை ஒழிக்க முடியும், ஆனா பதவியேற்று 6 மாசத்துல ஒழிக்குறேன்னு சொல்லி பதவிக்கு வந்தவங்கலாம் 2 வருஷமாகியும் ஒன்னும் பண்ணல. கடந்த 6 மாசமா அதை பற்றி பேசக்கூட இல்ல. தேர்தல் வாக்குறுதியில இதெல்லாம் சொல்லித்தான் ஓட்டு வாங்குனார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு ராமநாராயணன் காலம் பொற்காலம் என்றால் விஷாலின் காலம்தான் அழிவு காலம்.
நடிகர் சங்க கட்டிடம் பூட்டை உடைத்ததற்காக விஷால் கைது செய்யப்பட்ட போது 'நான் இததான் எதிர்பார்த்தேன்'னு சொல்லியிருக்கார். தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை அவர் சவலாகத்தானே எடுத்துக்கொள்கிறார்?
விஷால் அரசியல் பண்றதுக்கு இந்தப் பதவிக்கு வந்துருக்கக்கூடாது. அரசாங்கத்துக்கு இணக்கமா இருந்து சங்கத்துக்கு வேண்டியத செய்றதுக்குத்தான் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி. அதை விட்டுட்டு எலெக்ஷன்ல நிக்குறதுக்கு இந்தப் பதவிய பயன்படுத்த கூடாது. ராம நாராயணன் தலைவரா இருந்தப்போ கலைஞர் கூட அவருக்கு இருந்த நெருக்கத்த பயன்படுத்தி சங்கத்துக்கு நிறைய நல்லது செஞ்சாரு. அதுதான் சங்கத்தோட பொற்காலம், விஷால் காலம் அழிவுகாலம்னுதான் சொல்லனும். கையை தூக்கிப் பேசினார் வெறும் 28 லட்சம் கேபிள் டீவியில் வந்ததை 1.50 கோடியாக உயர்த்தியாச்சு என்று. இதுவரைக்கும் ஒரு ரூபா கூட வரல. இருந்தாலும் அவர் ரொம்ப புத்திசாலி, எல்லோருக்கும் வெளிப்படையா லஞ்சம் கொடுத்துவச்சுருக்காரு. 60 வயசுக்கு மேல இருக்குறவங்களுக்கு முன்னாடி 6000 கொடுத்தோம், இவரு 12000 ஆக்குனாரு. 50 வயசுக்கு மேல வேலை இல்லாதவங்களுக்கு 5000 கொடுக்குறாரு. இருந்த 7.50 கோடி சங்க நிதியையும் இப்படியே காலி பண்ணிட்டாரு. தேர்தலின் போது இதையெல்லாம் நிதி உருவாக்கி செய்வோம்ணாங்க, ஒன்னும் இல்ல. இப்ப இளையராஜா விழா நடத்தி இதை சரிகட்டக்கூடாது. இருந்த நிதிக்கு மேல அதிகமா சேர்க்கணும். மார்ச் மாசம் மறுபடியும் தேர்தல் வரணும், இவரே மறுபடியும் நின்னு ஜெயிச்சு சங்கத்த இன்னும் காலி பண்ணாலும் பண்ணதுதான்.