கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஹிந்தி சூப்பர்ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் எந்தப் பொருளையும் பதுக்க வேண்டாம் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்து சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில்...

"பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் ஊரடங்கைப் பின்பற்றி வருகிறது. அதேபோல் சில சுயநலமற்ற கரோனா போராளிகள் அத்தியாவசியப் பொருள்களை நாம் தினமும் பெற உதவி செய்கின்றனர். அப்படிப்பட்ட தன்னலமற்ற சேவை செய்பவர்களால்தான் இந்த ஊரடங்கு வெற்றி பெற்றுள்ளது. அப்படி விநியோகிக்கும் போராளிகளுக்கு என் மனப்பூர்வமான நன்றி. உணவுப் பொருட்கள், மருந்துகள் என முக்கியப் பொருட்களின் விநியோகம் தடைப்படாமல் இருக்க ஓய்வின்றி உழைக்கும் மக்களுக்கும் சேர்த்து நன்றி சொல்கிறேன். நம் நாட்டுக் குடிமக்கள் அனைவரும் சற்று நிதானமாக இருக்க வேண்டும் என்று பணிவுடன் கோருகிறேன். அத்தியாவசியப் பொருட்களில் தட்டுப்பாடு இருக்காது. எனவே தயவுசெய்து பொருட்களைப் பதுக்காதீர்கள். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.