நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி மற்றும் அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடி விட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை ஒரு வார காலம் பள்ளிக்கு போகாமலே இருந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மகனைப் பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்த போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த தொந்தரவு செய்த மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், மோகன்.ஜி, கார்த்திக் சுப்புராஜ், சீனு ராமசாமி, யுகபாரதி உள்ளிட்ட பலரும் கண்டங்கள் தெரிவித்த நிலையில் தற்போதும் அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "சாதிய விழிப்புணர்வுப் போரைத் தொடங்குவோம். திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரியில் பள்ளி மாணவனையும் அவனுடைய இளம் தமக்கையையும் வெட்டிச் சாய்த்த அரிவாளின் பின்னணியில் சாதியம் இருக்கிறது என்பதும், ஓடிய ரத்தம் தமிழரின் குருதி என்பதும், இப்பாதகச் செயலில் ஈடுபட்டது பள்ளி மாணவர்கள் என்பதும் உண்மையிலேயே என்னை பேரதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.
சாதி, மதங்களைக் கடந்து ஒன்றாய்க் கலந்து திரிந்து ஒரு தட்டில் உண்ணும் மாணவச் சமுகத்திலேயே இந்த வன்மம் தலைதூக்கி நிற்பதும், அதன் பின்னணியில் பெற்றோர்களின் வளர்த்தெடுத்தல் அடங்கியிருப்பதும், சாதிய தீயை அணைய விடாமல் சில சுயலாப சாதிய அமைப்புகள் நெய்யை ஊற்றி வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதெல்லாம் அவமானத்திற்குரியதாக அமைந்திருக்கிறது, வேங்கை வயலைப் போல் வேடிக்கை பார்க்காமல், இனியும் இதுபோன்று தமிழகத்தில் எங்கும் நடந்திடாமல் காக்கும் பெரும் பொறுப்பு தமிழக அரசின் கைகளில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். மேலும், சாதிய விழிப்புணர்வு போரை தமிழகத்தில் தொடங்க வேண்டியது தமிழர்களாகிய நமது தலையாய கடமையாகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வீடியோ வெளியிட்டுள்ள அமீர், அதில் "ஆதிக்கச் சாதியின் மனநிலை அரசியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்கள் கையில் சென்றிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் சாதிய அடையாளமாகக் கயிறுகளை கையில் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் என்பதை கேட்கும் போது, நாம் எந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது கேள்விக்குறியாக வந்து நிற்கிறது. பெரியாரின் வழிவந்த திராவிட காட்சிகள் 60 ஆண்டுகாலம் ஆட்சி கட்டிலில் இருக்கக் கூடிய சூழலில் இன்றைக்கும் சாதிய பாகுபாடு, சாதிய மன நோய், சாதிய வெறி மேலோங்கி இருப்பது பேரதிர்ச்சியாக நிற்கிறது" என தெரிவித்துள்ளார்.