சீனாவின் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் ஜாக் மா. அண்மையில் சீன அரசின் நிதி கொள்கைகளைக் கண்டித்தும் விமர்சித்தும் ஜாக் மா பேசியிருந்தார். இதன்பின் ஜாக் மா காணாமல் போனதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் ஜாக் மாவின் அலிபாபா பிக்சர்ஸ் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. சீன திரைத்துறையில் மட்டும் முதலீடு செய்யாமல் ஹாலிவுட்டிலும் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து முதலீடு செய்து வருகிறது அலிபாபா பிக்சர்ஸ் நிறுவனம்.
கடந்த வருடம் வெளியாகி மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘1917’ படத்திலும் ஜாக் மாவின் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. 2015ஆம் ஆண்டு வெளியான 'மிஷன் இம்பாஸிபிள் ரோக் நேஷன்' திரைப்படத்திலிருந்து தங்களது ஹாலிவுட் முதலீட்டை அலிபாபா பிக்சர்ஸ் தொடங்கியது. 170 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகளவில் 682.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.
இது தவிர சீன திரைப்பட ஸ்டூடியோவான ஹுவாயி பிரதர்ஸ் மீடியாவுக்கு அலிபாபா பிக்சர்ஸ் குழுமம் 103 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாகக் கொடுத்திருக்கிறது.
"எங்கள் சர்வதேசமயமாக்கலின் முதல் படிதான் 'மிஷன் இம்பாஸிபிள் ரோக் நேஷன்'. இன்னும் பல சர்வதேச திரைப்பட ஸ்டூடியோக்களுடன் இணைந்து பணியாற்ற அலிபாபா பிக்சர்ஸ் ஆர்வத்துடன் உள்ளது. அதன் மூலம் திரைத்துறைக்கான வளங்கள், தொழில்நுட்பங்கள், திறமைகளை ஒருங்கிணைத்து உலகத்தரம் வாய்ந்த ஒரு பொழுதுபோக்குத் தளத்தை உருவாக்க விரும்புகிறோம்" என்று அலிபாபா பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகாரி ஜாங் சென் கூறியுள்ளார்.