எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அஜித்திடம் இருந்து பத்திரிகையாளர்களுக்கு ஒரு அறிக்கை... அதை வாசிப்பதற்கு முன்பு அது உண்மையானதுதானா என்று உறுதிப்படுத்துவதில்தான் நாமும் கவனம் செலுத்தினோம். அந்த அளவுக்கு வெளிஉலகத்திலிருந்து விலகியே இருக்கிறார் அஜித். உண்மையான அறிக்கைதான் அது. அதுவும் திருப்பூரில் அஜித் ரசிகர்கள் நூறு பேர் பாஜகவில் இணைந்த விழாவில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அஜித்தை பாராட்டிப் பேசிய அடுத்த நாளே வெளிவந்திருக்கும் அறிக்கை. தான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் என்ற அடையாளத்தை விரும்பவில்லை என்றும் எந்த அரசியல் கட்சி சார்ந்த பேனர்களிலும் தன் பெயர் இடம் பெறுவதை தான் விரும்பவில்லை என்பதை உறுதியாகக் கூறியிருக்கிறார் அஜித். இது பாஜகவுக்கான அஜித்தின் பதிலடி என்று பாஜக எதிர்ப்பு நிலையில் உள்ளவர்கள் கொண்டாடுகின்றனர். இதற்கு முன்பு தமிழகத்தின் முக்கிய கட்சிகள், தலைவர்களுடன் அஜித்தின் தொடர்பு எவ்வாறு இருந்துள்ளது என்பதையும் அஜித், தன் மன்றங்களைக் கலைத்த பின்னணியையும் பார்ப்போம்.
2011 ஆம் ஆண்டு... தனது பிறந்த நாளுக்கு இரண்டு நாட்கள் முன், 29 ஏப்ரல் அன்று நடிகர் அஜித் தன் ரசிகர்களுக்குக் கொடுத்த பிறந்த நாள் விருந்து, இந்த அறிவிப்பு. 'விரும்பத்தகாத சில விஷயங்கள் நடப்பதால், மாநிலம் முழுவதும் இருந்த தன் ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாகவும், நலத்திட்டங்கள் செய்வதற்கு நல்ல மனம் போதும், அமைப்பு தேவையில்லை' எனவும் கூறியிருந்தார் அஜித். அவரின் இந்த அறிவிப்பு, திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பிற நடிகர்களின் ரசிகர்கள் மத்தியிலும், விவாதங்களைத் துவக்கியது. அதுவரை, 'கிங் ஆஃப் ஓப்பனிங்' என்று அழைக்கப்பட்டவர் அஜித். அது அவரது ஐம்பதாவது படமான மங்காத்தா வெளிவர இருந்த நேரம். ரசிகர் மன்றங்களைக் கலைத்ததால் அந்தப் படத்திற்கு வழக்கமான ஓப்பனிங் இருக்காதென்றும், ரசிகர்கள் கோபமாய் இருப்பார்கள் என்றும் பேசப்பட்டது. அஜித் அமைதியாகவே இருந்தார். வெளிவந்தது மங்காத்தா. மிகப்பெரிய ஓப்பனிங் தந்தனர் அஜித் ரசிகர்கள்.
நடிகர்கள் மன்றங்களை வைத்திருப்பது நற்பணிகளுக்காக மட்டுமில்லை, தங்கள் மார்க்கெட்டுக்காகவும்தான். அவற்றைக் காட்டி, பின்னாளில் அரசியலில் நுழைந்த நடிகர்கள் பலர். மன்றங்கள் இருந்த போதும் கூட, வருடம்தோறும் ரசிகர் மன்ற கூட்டங்களோ, சந்திப்புகளோ நடத்தும் வழக்கமில்லை அவருக்கு. மன்றங்களைக் கலைத்ததன் மூலம், ரசிகர்களை எந்த விதத்திலும் பயன்படுத்த மாட்டேன் என்று நிரூபித்தார். ரசிகர்களும் அவரைப் புரிந்து கொண்டு அமைப்பில்லாமலேயே தொடர்ந்தனர்.
கலைஞருக்கும் அஜித்திற்குமான உறவு கிட்டத்தட்ட அஜித்தின் திருமணத்தில் ஆரம்பித்தது. இவரது திருமண வரவேற்பில் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். கலைஞரும் நேரில் சென்று அஜித்தை வாழ்த்தினார். பின்னர் அஜித் திரையுலகில் வளர்ந்தபோது ஓரிரு முறை ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக அஜித்குமார் சந்தித்தார்.
திரைக்கலைஞர்களுக்கு நிலம் ஒதுக்கிய கலைஞரை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த 'பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா' நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித்குமார் மேடையில் பேசியபோது... '60 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழகத்திற்காக உழைத்து கொண்டிருக்கும் தலைவரே' என வாழ்த்திப் பேச ஆரம்பித்து பின்னர், 'பொது நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போன்ற நடிகர்களை மிரட்டி வரவைக்கின்றனர். எங்களுக்கு அரசியல் வேண்டாம். யாரும் எங்களை கட்டாயப்படுத்த கூடாது என்று நீங்கள் தான் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்' என்று பேசினார். அனைவரும் கலைஞரை பாராட்டிக்கொண்டிருந்த வேளையில் அஜித் இப்படி பேசியது, ஒரு நிமிடம் அரங்கமே அதிர்ச்சியில் நின்றது. ரஜினிகாந்த் அஜித்தின் இந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார். அஜித் இப்படி பேசியதற்கு ஒரு சேர எதிர்ப்புகளும், ஆதரவும் கிளம்பின. ஒரு முதலமைச்சருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அஜித் இப்படி பேசியதற்கு, 'அஜித் ஜெயலலிதா விசுவாசி' என்றும், அவர் மேல் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், கைது கூட செய்யப்படலாம் என்ற அளவுக்கு பேசிக்கொண்டனர்.
பின்னர் இந்த கடும் கொந்தளிப்பிற்கு மத்தியில் பிரச்சனை குறித்து விளக்கமளிக்க ரஜினிகாந்தும், அஜித்குமாரும் கலைஞரை நேரில் சென்று சந்தித்தனர். அந்த சந்திப்பிற்குப் பிறகு கலைஞர் இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்... 'எனக்கு திரையுலகம் எடுத்த பாராட்டுவிழாவில் கலைஞர் பெருந்தகை அமிதாப் பச்சன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் அள்ளித்தெளித்த அன்பு மலர்களினிடையே அஜித் என்ற தும்பை மலரும் என் மேல் விழுந்தது. அஜித் ஒரு தும்பை மலர், அது மாசற்ற மலர் எனினும் எதிராக விழுந்த மலரோ என்று ஐயப்பாட்டை எழுப்பிய பத்திரிகைகள் அதை பூதாகரமாக்கி விட்டனர். இதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளில் திரையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றி அஜித் விளக்கமளித்தார், கலையுலகில் கலகம் ஏற்படுத்தலாம் என காத்திருந்தோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது' என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சமீபத்தில் கலைஞர் உடல்நலம் குன்றியிருந்தபோது மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்த அஜித் ராஜாஜி மண்டபத்தில் கலைஞரின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்.
அதற்கு முன்பு ஜெயலலிதா உடல்நிலை மோசமாகி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போதும் மறைந்த பிறகும் ஜெயலலிதா தனது அரசியல் வாரிசு அஜித்தான் என்று எழுதிவைத்திருப்பதாகவும் அதிமுக அடுத்து அஜித் தலைமையில்தான் என்றும் சிலர் பேசிக்கொண்டனர். ஆனால், எந்தப் பக்கமிருந்தும் அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து செய்திகள் வரவில்லை. தமிழ் ஊடகங்களை விட மலையாள, ஆங்கில நாளிதழ்களில் இந்த செய்தி அதிகம் வளம் வந்தது. ஆனால், அஜித் இதுகுறித்து சிறிதும் வாய்திறக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு அஜித் மேல் அன்பு உண்டு. 2011 இல் அதிமுக ஆட்சி அமைந்த போது, திமுக சார்ந்த நிறுவனங்கள் தயாரித்த படங்கள் கெடுபிடிகளை சந்தித்த போது. தயாநிதி அழகிரி தயாரித்த 'மங்காத்தா' மட்டும் சுமூகமாக வெளிவந்தது இதற்கு சான்று. ஜெயலலிதா மரணத்தின்போது வெளிநாட்டில் இருந்த் அஜித் பின்னர் சென்னை வந்து விமான நிலையத்திலிருந்து நேரடியாக ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
இப்படி அஜித் ஒதுங்கியிருக்கும் போதும் அவ்வப்போது அரசியலில் அவரது பெயர் அடிபடும். வெகு சில சமயங்களில்தான் அஜித் பதில் கொடுப்பார். அப்படி ஒரு தருணம்தான் நேற்று நிகழ்ந்தது.