நடிகர் அஜித், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை, சினிமா கலைநிகழ்ச்சிகள், விருது விழாக்கள் போன்றவற்றிலும் கலந்துகொள்ள மாட்டார். தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்ததிலிருந்து ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. ஆனால், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த 'விஸ்வாசம்' படத்தின் முதல் நாளிலும் அதன் வெற்றியிலும் 50வது நாள் கொண்டாட்டத்திலும் இது மீண்டும் நிரூபணமானது.
அஜித்தின் ரசிகர்கள், அஜித்தைப் பார்த்துவிடவேண்டுமென்ற ஆர்வத்திலும் தவிப்பிலும் இருப்பவர்கள். இதனால், விமான நிலையத்திற்கோ படப்பிடிப்பிற்கோ எங்கு அஜித் வருவதாக தகவல் கிடைத்தாலும் அங்கு கூடிவிடுவார்கள். ஒரு முறை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அஜித் வர, அங்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடி, பின்னர் நிலைமை சகஜமாக நெடுநேரம் ஆனது. படப்பிடிப்பில் தன்னைக் காண வரும் ரசிகர்களை முடிந்த அளவு சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவர் அஜித். ஆனால், சமீப காலமாக அவரது படப்பிடிப்புகள் அனைத்தும் ஹைதராபாத் அல்லது வேறு வெளியூர்கள், வெளிநாடுகளில்தான் நடக்கின்றன. இதனால் அஜித்தைக் காண அவரது ரசிகர்களுக்கு வாய்ப்பு அமைவது அரிது. எங்காவது அஜித், காரில் செல்வதைப் பார்த்தால் வண்டியில் அவரை பின்தொடர்ந்து ரசிகர்கள் செல்வதுண்டு. ஒரு முறை, இப்படி அதிவேகமாக ரசிகர்கள் பின்தொடர்வதைப் பார்த்த அஜித், தனது காரை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றார்.
இப்படி அஜித்தை எங்கு பார்க்க முடியும், எப்படி பார்க்க முடியும் என்று அவரது தீவிர ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கும் நிலையில், தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நடிகர் அஜித், திருவான்மியூர் பகுதியில் குடியிருக்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் அவர் திருவான்மியூர் பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருவது வழக்கம். இன்றும் அவர் எப்படியும் அங்கு வருவார் என்று தெரிந்துகொண்ட ரசிகர்கள், வாக்குப்பதிவு தொடங்கும் நேரமான 7 மணிக்கு முன்பாகவே அங்கு கூடத்தொடங்கினர். போலீஸ் பாதுகாப்பும் அந்த வாக்குச்சாவடிக்கு அதிகமாகவே இருந்தது.
சுமார் ஏழரை மணியளவில் நடிகர் அஜித்தின் கார் திருவான்மியூரில் உள்ள சென்னை பெருநகர தொடக்கப்பள்ளியில் வந்து நிற்க, கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் கத்த ஆரம்பித்தனர். செய்தியாளர்களும் ரசிகர்களும் காரை சூழ்ந்துகொள்ள அஜித் கதவைத் திறந்து இறங்கினார். அங்கிருந்த காவல்துறையினர் அவரையும் ஷாலினியையும் உள்ளே அழைத்துச் சென்றனர். ரசிகர்களைப் பார்த்த அஜித் புன்னகையுடன் நடந்தார். ரசிகர்களின் கூட்டத்திலும் அவர்களது உற்சாகக் குரலிலும், அஜித் வாக்களித்து திரும்பச் செல்லும் வரை அந்தப் பகுதி பரபரப்பாக இருந்தது. வாக்களித்து முடித்ததும் முதலில் அஜித்தை காருக்கு அழைத்துச் சென்று சேர்த்து, பிறகு ஷாலினியை அழைத்துச் சென்றனர் காவல்துறையினர்.
"தல எங்க மிஸ் ஆனாலும் இங்க மிஸ் ஆக மாட்டார். கண்டிப்பா பாத்துரலாம்னுதான் வந்தோம். அதே மாதிரி பாத்துட்டோம்" என்று குதூகலமாகக் கூறினார் அஜித் ரசிகர் ஒருவர். கூடிய கூட்டத்தால் அந்த வாக்குச்சாவடிக்கு பாதுகாப்பு அளிப்பதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது.