குட்டிபுலி, தர்மதுரை, சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்திருப்பவர் சரவண சக்தி. சமீபத்தில் பில்லா பாண்டி என்ற படத்தை இயக்கி அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தார். அவரதுத் திரைத்துறை அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அதன் தொகுப்பு.
ஜெ.கே.ரித்தீஸை வைத்து நாயகன் படத்தை எடுத்தேன். அதைத் தொடர்ந்து ஒரு விளம்பர படத்தில் வேலைப் பார்க்கும்போது பெரிய விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து குணமாகி வருவதற்கு இரண்டு வருடங்களானது. அப்போது என்னைப் பெரும்பாலும் யாருக்கும் ஞாபகம் இல்லை. உடனே படம் இயக்குகிற வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, சினிமாவின் தொடர்பு விடாமல் இருப்பதற்கும், அடிப்படைத் தேவைகளுக்காகவும், சினிமாவில் புரடக்ஷன் துறையிலும், விளம்பர படங்களிலும், வேறு சில பரிமாணங்களிலும் வேலைச் செய்திருக்கிறேன். அதில் ஒன்றுதான் நடிப்பும். ஆனால், என்னை ஒரு நடிகனாக ஏற்றுக்கொண்டீர்களா எனத் தெரியவில்லை. இருந்தாலும், தொடர்ந்துத் திரைப்படங்களில் நகைச்சுவைப் வேடங்களில் கண்டிப்பாக நடிப்பேன். அதற்கு காரணம், சின்ன வயதிலிருந்து சினிமாவில் ஜெயிக்கவேண்டுமெனப் போராடுகிறவர்கள் சிரிப்பதையே மறந்திருப்பார்கள். கண்களை மூடினாலும் கதை, எடிட்டிங், கேமரா என்று தான் மனதில் தோன்றும். எனவே, என்னால் தான் சிரிக்கமுடியல, என்னைப் பார்க்கிறவர்களையாவது சிரிக்க வைக்கலாமென்ற எண்ணம் எனக்குள் இருக்கிறது.
பொதுவாகவே அஜித் மேல் எல்லோருக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. நான் ஊர்களுக்குப் போகும்போது அஜித் ரசிகர்களாக இருக்கிறவர்கள் எப்பவும் போல வேலைக்குப் போவார்கள், கடுமையாக உழைப்பார்கள், வேலை முடிந்து வந்ததும் ரசிகர் மன்றத்தில் கூடி, அதிலும் கடுமையாக வேலைப் பார்ப்பார்கள். நானும் ஒரு அஜித் ரசிகனாக இருப்பதால் அந்த விஷயம் என்னை மிகவும் ஈர்த்தது. அதை வைத்துதான் பில்லா பாண்டி படத்தை எடுத்தேன். அதுபோல, ஹீரோவாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் படத்தில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அஜித் ரசிகராக இருந்தார். சாதாரணமாக, பொதுமேடைகளில் அஜித், விஜய் பற்றி பேசினால் நிறைய கைத்தட்டல்கள் வரும். அந்தவகையில் படத்தில் அஜித் பற்றி பேசியிருப்பது ஒரு வியாபார யுக்தியும்கூட. அதுமட்டுமில்லாமல் நாம் ரசித்த ஒன்றைப் பற்றி படம் எடுத்தால் தான் அது ஓடும், நாங்கள் அஜித்தை ரசிக்கிறோம், எனவே அவரைப் பற்றி படம் எடுத்திருக்கிறோம்.
அஜித் பற்றிப் பேசுவது மக்களை ஈர்ப்பதற்காக தான். ஆனால், அவர்கள் தியேட்டர்ல வந்து பார்க்கும்போது படத்தில் ஒரு கதை இருக்கனும். அஜித் ரசிகர்களின் வாழ்வியலை இந்தப் படம் பேசியிருக்கும். அவர்களுக்கு வருகிற பிரச்சனைகள், அஜித் ரசிகனாக இருப்பதால் அவனொட மனநிலை எப்படியிருக்கும் என்பதுதான் படம். படத்தில் ஆங்காங்கே அஜித் பற்றி பேசியிருந்தாலும் படம் கதைக்குள் தான் நகரும். க்ளைமேக்ஸ் சீனில் அஜித் போட்டோயிருக்கிற காரில் ஒருவர் வந்து காப்பாத்துறது மாதிரி எடுத்திருந்தோம். அதில் அஜித்தே வந்து காப்பாற்றுவது போல் யோசித்தோம். அதற்காக அஜித்திடமும் கேட்டுப்பார்த்தோம். அவர் அப்போது ஹைதராபாத்தில் இருந்ததால் அவரைப் புடிக்கமுடியல. படத்தை அஜித் பார்த்தாரானு தெரியல. ஆனால், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா என்னைக் கூப்பிட்டுப் பாராட்டுனார். அதுபோல இயக்குனர் சிவா எனக்கு நெருங்கிய நண்பர், பாட்டு ரெக்கார்டு பண்ணின உடனே அவரிடம் போட்டுக் காட்டினேன். அவர் “ஓப்பனிங் சாங்கே பயங்கரமா இருக்கே”னு சொன்னார். படம் ரிலீஸ் ஆனபோது தம்பிராமயா விஸ்வாசம் பட சூட்டிங்கில் இருந்தார், அவர் அஜித்திடம் பில்லா பாண்டி படத்தைப் பற்றி பேசியதாக சொன்னார். இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் பில்லா பாண்டி படம் சர்க்கார் படத்துடன் ரிலீஸானது என்பது தான். நாங்கள் வெகு நாட்களுக்கு முன்பே பில்லா பாண்டி ரிலீஸ் தேதியை அறிவிச்சுட்டோம், சர்க்கார் படம் திடீரென்று ரிலீஸ் ஆனது. அவ்வளவு பெரிய படத்துடன் மோதுவது நடக்காத காரியம். நான் தேவா படத்தில் விஜய் உடனும் வேலைப் பார்த்திருக்கிறேன். எனக்கு இருவரைப் பற்றியும் நன்றாக தெரியும். எனவே, சர்க்கார் ஒரு யானை, பில்லா பாண்டி ஒரு எறும்பு, அது சாப்பிட்டு கீழே சிந்துவதுக் கிடைத்தாலேப் போதும் என்பதுதான் எங்கள் எண்ணமாக இருந்தது. மீம் கிரியேட்டர்ஸ் இரண்டு படங்களையும் ஒப்பிட்டே என் படத்தையும் ஓட வைத்துவிட்டார்கள். பெரிய பிரபலமாகவில்லை என்றாலும் பில்லா பாண்டி வணிகரீதியில் வெற்றிப் படமாகவே அமைந்தது. படத்தின் ஹிந்தி ரைட்ஸ் மட்டுமே ஐம்பது லட்சத்திற்கு விற்றது, எனப் பெருமிதத்துடன் பேசினார்.