
இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகளில் பணிபுரிபவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது நிறைய பாலிவுட் நட்சத்திரங்களே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் உள்ளிட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமிதாப் மற்றும் அபிஷேக் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் இத்துயரிலிருந்து விரைவில் அமிதாப்பின் குடும்பம் மீண்டு வரவேண்டும் என்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் கரோனா பாதிப்பைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.