நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். தனது வீட்டிலுள்ள லாக்கரில் இருந்த 60 சவரன் தங்க நகைகளைக் காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்டமாக ஐஸ்வர்யா வீட்டின் பணிப்பெண் மற்றும் ஓட்டுநர் வெங்கடேசனை விசாரித்தனர். அதில் பணிப்பெண் ஈஸ்வரி திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து முதற்கட்டமாக 20 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டிலிருந்து ஓட்டுநர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைத் திருடி விற்பனை செய்துள்ளார்.
அதன் மூலம் வந்த பணத்தை அவரது கணவர் வங்கி கணக்குக்கு பரிவர்த்தனை செய்துள்ளார். மேலும், அண்மையில் சோழிங்கநல்லூரில் 95 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கியுள்ளார். இதற்காக வங்கியில் கடன் வாங்கிய ஈஸ்வரி அதனை இரண்டே வருடங்களில் கட்டி முடித்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசனை கைது செய்தனர். பின்பு ஈஸ்வரியிடமிருந்து களவு போயிருந்த 100 சவரன் தங்க நகைகளும், 30 கிராம் வைர நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டுநர் வெங்கடேசனிடம் ஈஸ்வரி ரூ. 9 லட்சம் கொடுத்துள்ளார். தனது கணவர் அங்கமுத்து பெயரில் 350 கிராம் தங்க நகைகளை வங்கி கணக்கில் அடகு வைத்துள்ளார். இதனை தற்போது மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இதனிடையே எந்தெந்த நகைகள் திருடப்பட்டது என்று ஐஸ்வர்யாவால் தெளிவாக கூற முடியவில்லை என கூறப்படுகிறது. ஏனென்றால் இறுதியாக தங்கை சௌந்தர்யாவின் திருமணத்தின் போது தான் கடைசியாக அந்த நகைகளை அணிந்துள்ளாராம்.
அதோடு எந்த எந்த நகைகள் திருட்டப்பட்டுள்ளது என ஐஸ்வர்யாவுக்கு தெளிவாக தெரியாததால் தங்கை சவுந்தர்யாவின் திருமண ஆல்பத்தில் ஐஸ்வர்யா அணிந்து இருந்த நகைகளை காணாமல் போன நகைகளுடன் ஒப்பிட்டு போலீசார் மதிப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் ஐஸ்வர்யா பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அவர்களை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.