நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். தனது வீட்டிலுள்ள லாக்கரில் இருந்த 60 சவரன் தங்க நகைகளைக் காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்டமாக ஐஸ்வர்யா வீட்டின் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசனை விசாரித்தனர். அதில் பணிப்பெண் ஈஸ்வரி திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து முதற்கட்டமாக 20 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டிலிருந்து ஓட்டுநர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைத் திருடி அவர் விற்பனை செய்துள்ளார்.
ஈஸ்வரியிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டுப் பத்திரம் ஆகியவை மீட்கப்பட்டது. மேலும் ஓட்டுநர் வெங்கடேசனிடம் ஈஸ்வரி ரூ. 9 லட்சம் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அதோடு தனது கணவர் அங்கமுத்து பெயரில் 350 கிராம் தங்க நகைகளை வங்கி கணக்கில் அடகு வைத்துள்ளார். இதனை தற்போது மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் காவல்துறையினர் கோரிய நிலையில் அவர்களை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஈஸ்வரியிடம் இருந்து மேலும் 43 சவரன் தங்க நகைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பொருட்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் இன்னும் தங்க நகைகள் மீட்டெடுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.