'காக்கா முட்டை' படத்தின் மூலம் கவனம் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் ‘மோகன் தாஸ்’, ‘துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்திலும் 'டிரைவர் ஜமுனா' மற்றும் 'சொப்பன சுந்தரி' ஆகிய படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் 'ஃபர்ஹானா' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் 'டிரைவர் ஜமுனா' படம் வருகிற 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இந்தியில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை 'எண்டேமால் ஷைன் இந்தியா' மற்றும் 'நட்மெக் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் உருவாகும் இப்படத்திற்கு 'மாணிக்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை ‘லுடோ’, ‘ஜக்கா ஜாசூஸ்’ மற்றும் ‘சத்ரசல்’ ஆகிய படங்களின் கதாசிரியராக பணிபுரிந்த சாம்ராட் சக்கரவர்த்தி இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் சம்யுக்தா சண்முகநாதன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உளவியல் திரில்லர் ஜானரில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நைனிடாலில் தொடங்குகிறது. மேலும் அடுத்த ஆண்டு படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ் இதற்கு முன்னதாக 2017ஆம் ஆண்டு வெளியான 'டாடி' என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.