![Aishwarya Rajesh](http://image.nakkheeran.in/cdn/farfuture/x_TY-uVI4Ivqlm2ySem5L-S7tGifra3ad3vQI7X0QsQ/1607501306/sites/default/files/inline-images/Aishwarya-Rajesh.jpg)
பிரபல சின்னத்திரை நடிகையான விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிக்காகப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜே சித்ரா, தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு, நள்ளிரவில் தான் தங்கியிருக்கும் நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலுக்குத் திரும்பியுள்ளார். அவரது வருங்கால கணவரும் அவருடன் அந்த ஓட்டலில் தங்கியுள்ளார். இதனையடுத்து, அந்த அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாலை முதலே செய்திகள் வெளியாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அறையில் உடன் தங்கியிருந்த அவரது வருங்கால கணவரான ஹேம்நாத்திடம் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இது குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "நடிகை சித்ராவின் மரணம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல திறமையான நடிகை நம்மை விட்டு மிகவிரைவில் சென்றுவிட்டார். பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதை உணரவேண்டும். ஒரு சமூகமாக இந்த உண்மையை முன்பை விட வலுவாக நாம் வலியுறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.