தி மேட்ரிக்ஸ் திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களும், சண்டை காட்சிகளும் பார்பவர்களை கவரச் செய்தது. இப்படத்தின் சண்டை காட்சிகள் இன்றுவரை பல படங்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாவது பாகத்தையும், அதே ஆண்டின் இறுதியில் மூன்றாவது பாகத்தையும் வெளியிட்டது படக்குழு. இப்படங்களை வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனமும் வில்லேஜ் ரோட்ஷோ நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தன. லானா வக்காவ்ஸ்க்கி, லில்லி வக்காவ்ஸ்க்கி என சகோதரிகள் இருவர் இப்படத்தை இயக்கினார்கள்.
ஜான் விக் தொடர்களின் மூலம் உலகம் முழுவதும் தனக்கென ரசிகர்களை கொண்டிருக்கும் கீனு ரீவ்ஸ்தான் மேட்ரிக்ஸ் படத்தின் ஹீரோ. இப்படத்தில் கேரி ஆன் மோஸ், லாரன்ஸ் ஃபித்பர்ன், ஹூகோ வீவிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
தி மேட்ரிக்ஸ் தொடரின் நான்காம் பாகத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக பேசி வரும் நிலையில் அடுத்த வருடம் இப்படத்தை தொடங்க இருப்பதாகவும் கீனு ரீவ்ஸ் இப்படத்தில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர்களில் ஒருவரான லானாவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
20 வருடங்கள் கழித்து உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு படத்தின் நான்காம் பாகம் வெளியாகுவதால் இப்படத்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.