பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர், முன்பு வெளியான நிலையில் இறுதி ட்ரைலர் வெளியாகியுள்ளது. டீசரை போலவே இதற்கும் கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேமில் உள்ளதாக சமுக வலைதளத்தில் கூறி வருகின்றனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 16 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் திரையிடும் திரையரங்கில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப் போவதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபாஸ் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டார். இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத் மற்றும் கதாநாயகி க்ரீத்தி சனோன் உள்ளிட்டோர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டனர். அப்போது தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தவுடன் க்ரீத்தி சனோன் அவரது காரில் புறப்பட தயாரானார். அதற்கு முன் இயக்குநரை கட்டிப்பிடித்து விடைபெற்றார். அப்போது இயக்குநர் க்ரீத்தி சனோன் கன்னத்தில் முத்தமிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக ஆந்திர மாநில பாஜக நிர்வாகி, "உங்கள் கோமாளித்தனங்களை புனிதமான இடத்திற்கு கொண்டு வருவது உண்மையில் அவசியமா? திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவிலுக்கு முன்பாக முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பது போன்ற அன்பின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், இது அவமரியாதைக்குரியது" என குறிப்பிட்டுள்ளார். பின்பு அந்த பதிவை நீக்கியுள்ளார். பின்பு அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.