பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த மாதம் 16 ஆம் தேதி 3டியில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் மோசமான வரவேற்பைப் பெற்ற நிலையில் வசூலில் இதுவரை உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இப்படம் ரிலீசுக்கு முன்பே இந்து மத உணர்வைப் புண்படுத்தியதாக பல்வேறு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ரிலீசுக்கு பின்பும் அது தொடர்கிறது. அந்த வகையில் இப்படத்தில் வசனங்கள் சர்ச்சையை உருவாக்குவதாக இரண்டு பொதுநல மனுக்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், "படத்தில் ராமர், சீதை, அனுமன், ராவணன் எல்லோரையும் திரையில் காட்டிவிட்டு இது ராமாயணம் இல்லை என பொறுப்புத் துறப்பு வாசகம் போடுவீர்கள்... அதை நாட்டு மக்களும் இளைஞர்களும் நம்புவார்கள். அவர்கள் மூளையற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா" என சரமாரி கேள்வியை நீதிமன்றம் படக்குழுவினருக்கு எழுப்பியது.
இந்நிலையில் இப்படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆதிபுருஷ் படத்தால் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். கூப்பிய கைகளுடன் எனது நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன். நமது புனிதமான சனாதனத்துக்கும் மகத்தான தேசத்திற்கும் சேவை செய்ய அனுமன் பகவான் நம்மை ஒன்றிணைத்து நமக்கு பலம் தரட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.